செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு எச்.ராஜா ஆறுதல் கூறிய காட்சி.

மதரீதியாக மக்களை பிரிக்க போராட்டம் நடத்துகிறார்கள் - எச்.ராஜா குற்றச்சாட்டு

Published On 2020-01-27 08:59 GMT   |   Update On 2020-01-27 08:59 GMT
மதரீதியாக மக்களை பிரிக்கவே போராட்டங்கள் நடத்துகிறார்கள் என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றசம் சாட்டியுள்ளார்.
நாகர்கோவில்:

திருவட்டார் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பொதுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டம், பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்குதான். அங்கு மதரீதியாக துன்பப்படுவர்களை இந்தியாவில் ஏற்றுக்கொள்வதுதான் இந்த சட்டத்தின் முக்கிய அம்சம். இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அதிக சுதந்திரம் உள்ளது. இங்கு தான் அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் அந்தந்த மதத்தினரிடமே உள்ளது. ஆனால் இந்து கோவில்களின் நிர்வாகம் அரசிடம் உள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது அங்கு 17 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். ஆனால் இன்று 1½ சதவீதம் இந்துக்கள் கூட அங்கு இல்லை. அதேப்போல வங்காளதேசத்தில் 27 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். இன்று 7½ சதவீதம் இந்துக்கள்தான் அங்கு உள்ளனர்.

பாகிஸ்தானில் இந்து பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட போது இங்கு யாரும் போராடவில்லை. ஆனால் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுகிறார்கள். இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் முஸ்லிம்லீக்கும், தி.மு.க.வும் இரட்டை குழந்தைகளாக செயல்படுகிறார்கள்.

குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் ஒரு சதவீதம் சிறுபான்மையினர் கூட பாதிக்கப்படமாட்டார்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. மதரீதியாக மக்களை பிரிக்கவே போராட்டங்கள் நடத்துகிறார்கள்.

அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததற்காக தாக்கப்பட்டு உள்ளார். அவரை தாக்கியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எச்.ராஜா பேசிக்கொண்டிருந்த போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் மாடியில் இருந்து வாலிபர் ஒருவர் தனது செல்போனில் எச்.ராஜா பேச்சை படம்பிடித்துக் கொண்டிருந்தார். இதை தொண்டர்கள் பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார் அந்த வாலிபரை பிடித்து அவரது செல்போனை பார்த்தபோது அதில் எச்.ராஜா பேச்சு பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அவரை குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கூட்டம் முடிந்த பிறகு பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சனின் வீட்டிற்கு எச்.ராஜா சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
Tags:    

Similar News