செய்திகள்
கோப்பு படம்

முதல்வர் படம் வைப்பதில் பிரச்சினை: திமுக - அதிமுக மோதலால் ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு

Published On 2020-01-25 13:23 GMT   |   Update On 2020-01-25 13:23 GMT
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் வைப்பது தொடர்பாக எழுந்த பிரச்சினையால் ஊராட்சி அலுவலகத்திற்கு அ.தி.மு.கவினர் பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப் பகுதியில் வடகாடு ஊராட்சி அலுவலகம் உள்ளது. இந்த ஊராட்சி ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இங்கு தி.மு.க.வை சேர்ந்த தனலட்சுமி என்பவர் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்றார். இந்த ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 8 பேர் தி.மு.க.வை சேர்ந்தவர்களாகவும், ஒருவர் மட்டுமே அ.தி.மு.க.வை சேர்ந்தவராகவும் உள்ளனர்.

நேற்று முன்தினம் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீராச்சாமி, வடகாடு பகுதியை சேர்ந்த கணேசன், ஆனந்தன் மற்றும் அ.தி.மு.க.வினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது படம் வைக்க வேண்டும் என கூறி உள்ளனர். இதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இதனையடுத்து ஊராட்சி பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி சென்று விட்டனர். அதன்பிறகு அங்கு வந்த அ.தி.மு.க.வினர் மற்றொரு பூட்டை அதன்மீது பூட்டி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்களை கைது செய்ய வேண்டும் என தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகள் பூட்டை திறந்து விட்டனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இச்சம் பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News