செய்திகள்
சமீம் - தவுபீக்

சோதனைச்சாவடிக்கு அழைத்துச்சென்று 2 பயங்கரவாதிகளிடம் விசாரணை

Published On 2020-01-25 07:49 GMT   |   Update On 2020-01-25 07:49 GMT
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட களியக்காவிளை சோதனைச்சாவடிக்கு 2 பயங்கரவாதிகளை அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
நாகர்கோவில்:

களியக்காவிளை சோதனைச்சாவடியில் காவல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

வில்சனை சுட்டுக் கொன்றதாக அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய இருவரையும் போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த 2 நாட்களில் வில்சன் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கியை எர்ணாகுளம் கழிவுநீர் ஓடையில் இருந்தும், கத்தியை திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் இருந்தும் கைப்பற்றினர்.

முக்கிய ஆதாரங்கள் சிக்கிய நிலையில் கொலையாளிகள் இருவரும் வில்சனை கொலை செய்தது எப்படி? என்பதை நடித்துக் காட்ட உள்ளனர். இதற்காக இருவரையும் இன்று பிற்பகல் போலீசார் களியக்காவிளை அழைத்துச் செல்கிறார்கள்.

மார்க்கெட் ரோடு சோதனை சாவடிக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இதற்காக களியக்காவிளை சோதனை சாவடி முன்பு இன்று காலை முதலே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் போலீசார் காவலில் எடுத்த நாள் முதல் எர்ணாகுளம், திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை, பாலராமபுரம் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணை முடிந்ததும், அவர்கள் மீண்டும் நாகர்கோவில் கொண்டு வரப்பட்டு இங்குள்ள போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சில முக்கிய ஆதாரங்களையும், கடிதங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஒரு கடிதத்தில் அவர்கள் ஐ.எஸ்.ஐ. அமைப்பு என்றும், அதன் தமிழக தலைவர் ‘காஜாபாய்’ என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

காஜாபாய் என்பவர் தமிழக கியூ பிரிவு போலீசாரால் டெல்லியில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுபோல வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வாங்கி கொடுத்ததாக பெங்களூருவில் மெகபூப் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், கர்நாடகா மாநில தலைவர் என்று கூறப்படுகிறது.

அப்துல் சமீம், தவுபீக் இருவரிடமும் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதங்களில் குறிப்பிடப்பட்ட ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தமிழக தலைவராக காஜா மொய்தீனும், கர்நாடகா தலைவராக மெகபூப் பாஷாவும் இருக்கலாம் என்று கருதும் போலீசார் இது தொடர்பாக அவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே தவுபீக்கின் மனைவி மற்றும் உறவினர்கள் திருவனந்தபுரம், விதுரா பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். அந்த மையத்திற்கு தவுபீக் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதை அறிந்த போலீசார் அங்கு சென்றும் சோதனை நடத்தினர். அங்கிருந்து சில ஹார்டுடிஸ்க்குகளையும் கைப்பற்றினர். அவற்றை போலீசாரின் சைபர் கிரைம் பிரிவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இதிலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற பண உதவிகளை செய்தவர்கள் யார்? என்பது பற்றி தனிப்படை போலீசார் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.



அப்துல் சமீம், தவுபீக் இருவரின் போலீஸ் காவலும் வருகிற 31-ந்தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பு ஐ.எஸ்.ஐ. அமைப்பு பற்றியும், அதில் அங்கத்தினராக சேர்ந்தவர்கள் பற்றியும் போலீசார் கேள்வி கேட்டு வருகிறார்கள். இக்கேள்விகளுக்கு விடை தேட போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News