செய்திகள்
மாதா அமிர்தானந்தமயி

அன்பைவிட மகிழ்ச்சி எதுவும் இல்லை- மாதா அமிர்தானந்தமயி பேச்சு

Published On 2020-01-24 15:02 GMT   |   Update On 2020-01-24 15:02 GMT
அன்பு என்பது நம் ஆத்மாவுக்கு மிக நெருங்கிய உணர்வாகும் என்று மதுரையில் மாதா அமிர்தானந்தமயி பேசியுள்ளார்.

மதுரை:

பசுமலை மாதா அமிர்தானந்தமயி மடத்தில் 25-வது ஆண்டு பிரம்மஸ்தான ஆலய ஆண்டு விழா நடந்தது. மாதா அமிர்தானந்தமயி தலைமையில் சத்சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசனம் நடந்தது. நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி அருளாசி வழங்கி பேசியதாவது:-

குறுகிய கால வாழ்வில் தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்க வேண்டும். நாம் இன்று சாயம் பூசப்பட்ட போலியான மகிழ்ச்சியை காண்கிறோம். ஆனால் உள்ளே சுரண்டிப் பார்த்தால் காமம், கோபம், பேராசை, வெறுப்பு, வேதனை ஆகியவையே உள்ளன. வாழ்வில் எல்லையற்ற தன்மையை புரிந்து கொண்டால் நாம் மிகச் சிறியவர்கள் என்பது புரியும். இயற்கைதான் நமக்கு தாய்-தந்தையாக உள்ளது. மனித குலத்தை தவிர, பிற உயிரினங்கள் யாவும் இயற்கையை பாதுகாத்து வாழ்கின்றன.

இன்றைய சமூகத்தில் நல் ஒழுக்கத்தை விட, செல்வம் மிக முக்கியதானதாக கருதப்படுகிறது. நன்மைகளை விட அழகுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. செல்ல வேண்டிய திசை எது என்பதை விட, வேகத்துக்கு அதிக முக்கியத்துவம் கற்பிக்கப்படுகிறது. மனிதர்களை விட எந்திரங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன. இந்த பண்புகள் தற்போது சமூகத்தில் தொற்றுநோய் போல் பரவிக் கிடக்கிறது.

வாழ்வில் நல்ல பண்புகளுக்கு உரிய இடத்தை அளிக்காவிட்டால் கரையான் அரித்த மரம் போல உளுத்துப்போகும். வாழ்வின் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்கு இருக்காது. குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே அற உணர்வை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

மனிதன் தனது வாழ்க்கை பயணத்தை உலகின் தாளத்துக்கும், சுருதிக்கும் ஏற்ப அமைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவன் வாழ்வு போராட்டம் நிறைந்ததாக ஆகிவிடும். எல்லோரும் சிறிதளவு அன்புக்காகவே ஏங்குகிறார்கள். நாம் பிறருக்கு வழங்கும் மிக மதிப்புள்ள பரிசு, அன்பு ஆகும்.

அன்பு என்பது நம் ஆத்மாவுக்கு மிக நெருங்கிய உணர்வாகும். இந்த அன்பை வழங்க முடியவில்லை என்றால் பின்னர் வாழ்வில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது?

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஏழைப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News