செய்திகள்
நீட் தேர்வு

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம் குறைவு

Published On 2020-01-24 03:28 GMT   |   Update On 2020-01-24 03:28 GMT
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம் குறைந்து இருப்பதாக தேசிய தேர்வு முகமையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2020-21-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 3-ந் தேதி நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.

இதற்கு நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்து இருப்பதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து குறைவான மாணவர்களே விண்ணப்பித்து இருப்பதாக தேசிய தேர்வு முகமையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

2017-18-ம் கல்வியாண்டு முதல் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகின்றனர். அதன்படியே மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதுவதற்கு 88 ஆயிரத்து 881 பேர் விண்ணப்பித்தனர்.

2018-2019-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேரும், 2019-2020-ம் கல்வியாண்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த ஆண்டு இது குறைந்து உள்ளது. தற்போது (2020-2021-ம் கல்வியாண்டில்) தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருக்கின்றனர்.

இந்த புள்ளி விவரத்தின்படி பார்க்கையில், கடந்த ஆண்டை விட 16 சதவீதம் பேர் இந்த ஆண்டு குறைவாக விண்ணப்பித்து இருப்பது தேசிய தேர்வு முகமையின் புள்ளி விவரத்தில் தெரிய வந்து இருக்கிறது. இதுவே மற்ற மாநிலங்களின் புள்ளி விவரங்களை பார்க்கும்போது, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக காட்டுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை கட்-ஆப் மதிப்பெண் குறைதல், மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டம் போன்றவை காரணமாக நடப்பாண்டில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News