செய்திகள்
விசாரணை

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி மரணம்- சென்னை அதிகாரிகள் விசாரணை

Published On 2020-01-22 16:55 GMT   |   Update On 2020-01-22 16:55 GMT
திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் மரணம் அடைந்தது தொடர்பாக டாக்டர், நர்சுகளிடம் சென்னை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் இம்ரான் இவருடைய மனைவி பரிதா (வயது 25) கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டில் சேர்த்தனர். நேற்று காலை 9.30 மணிக்கு பரிதாவிற்கு வலிஅதிகமாகியுள்ளது. மேலும் வயிற்றிலிருந்து குழந்தை தலை வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியில் இருந்த நர்ஸிடம் தெரிவித்துள்ளனர். 

அப்போது நர்ஸ் உடனடியாக சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்யாமல் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் பரிதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பரிதாவின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் அலட்சியமாக பதில் கூறிய நர்சைகண்டித்து கோஷம் எழுப்பினர். தகவலறிந்து திருப்பத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேல் இன்ஸ்பெக்டர் பேபி உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய சிகிச்சை அளிப்பதாக கூறினர். அதற்குள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதா மருத்துவமனையில் இறந்தார். தகவல் அறிந்து உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் குவிந்தனர். உடனடியாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

உறவினர்களிடம் திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் யாஸ்மின் ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ் மருத்துவ அலுவலர் செல்வக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். தகாத வார்த்தை பேசிய நர்சுகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

சென்னை மருத்துவ பணிகள் இயக்குனரக அதிகாரிகள் இன்று திருப்பத்தூர் வந்தனர். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு குறித்து டாக்டர், நர்சுகளிடம் சென்னை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுகாதார இணை இயக்குனர் யாஷ்மின், துணை இயக்குனர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். விசாரணைக்கு பிறகு கர்ப்பிணி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 4 டாக்டர்கள் உள்ளனர். ஒரு மாதத்துக்கு 500 பிரசவம் நடக்கிறது. இதனால் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News