செய்திகள்
அமைச்சர் காமராஜ்

ரஜினி தேவையற்ற கருத்துக்களை பேசுவது சரியல்ல- அமைச்சர் காமராஜ் பேட்டி

Published On 2020-01-22 12:43 GMT   |   Update On 2020-01-22 12:43 GMT
தந்தை பெரியாரை பற்றி ரஜினிகாந்த் தேவையற்ற கருத்துக்களை பேசுவது சரியல்ல என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

திருவாரூர்:

திருவாரூரில் ஊராட்சித் தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்கு எதிரான, மக்கள் எதிர்க்கும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த திட்டமானாலும் அ.தி.மு.க. அரசு அதனை செயல்படுத்தாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் தமிழக முதல்வர் நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவது வேடிக்கை.

ஸ்டாலின்தான் நாடக நடிகர். அவருக்குத்தான் நாடகம் என்றால் என்ன என்பது தெரியும். எங்களுக்கு தெரியாது மீத்தேன் திட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் நாடகமாடியவர் அவர்தான். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலையில் தமிழக அரசு எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மழை காரணமாக நெல் கொள்முதலில் ஈரப்பதத்தால் எந்த பிரச்சினையும் ஏற்பட வில்லை. ஈரப்பதத்தால் பிரச்சனை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் திராவிட இயக்கத்தின் வழியாக வந்தவர்கள் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் எங்களுக்கு வழிகாட்டிகளாக இருந்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் தந்தை பெரியாரை பற்றி தேவையற்ற கருத்துக்களை பேசுவது சரியல்ல. எதையும் அவர் யோசித்து பேச வேண்டும். இதை பேசுவதால் எந்த பயனும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News