செய்திகள்
கோப்பு படம்

சேலம் அருகே சென்னை தொழில் அதிபர் கொலை - அறக்கட்டளை நிர்வாகி உள்பட 3 பேர் சிக்கினர்

Published On 2020-01-21 12:04 GMT   |   Update On 2020-01-21 12:04 GMT
சேலம் அருகே சென்னை தொழில் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சென்னை கிழக்கு தாம்பரம் கம்பர் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 62). சென்னையில் பல தொழில்களை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை மேச்சேரி அருகே உள்ள காமநேரி-கோவிலூர் சாலையில் வெட்டுக்காயங்களுடன் பாலசுப்பிரமணியம் பிணமாக கிடந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பால சுப்பிரமணியத்திற்கு கிரிஜா என்ற மனைவி உள்ளதும், இவர்களுக்கு குழந்தை இல்லாததால் பாலசுப்பிரமணியம் மட்டும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு வந்ததும் தெரிய வந்தது.

மேலும் பாலசுப்பிரமணியம் கடந்த சில மாதங்களாக சேலம் பழைய சூரமங்கலத்தில் உள்ள மைமூதின் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். மைமூதின் மகனுக்கு திருமண ஏற்பாடு நடந்ததால் கடந்த 15 நாட்களாக வேறு ஒரு நண்பர் வீட்டில் தங்கி எலவம் பட்டிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

குவாரிகளில் கல் உடைக்கும் எந்திரங்களை பழுது நீக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். ஜலகண்டாபுரம் அருகே அமராவதி அம்மன் கோவில் அறக்கட்டளை மேலாளராகவும் இருந்தார்.

இந்த நிலையில் அவர் சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை வழி மறித்து கத்தியால் குத்தியும், வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொன்றது தெரிய வந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அமராவதி அம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகி இளையராஜா, நாசர், ஏழுமலை ஆகிய 3 பேரை பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பாலசுப்பிரமணியம் சிலருக்கு பில்லி சூனியம் வைத்ததாகவும், மேலும் பெண் தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் 2 பேர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களையும் பிடித்தால் தான் கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News