செய்திகள்
கொலை செய்யப்பட்ட சந்தானபாண்டியன்

ராயக்கோட்டை ஊழியர் கொலை - செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை

Published On 2020-01-20 11:38 GMT   |   Update On 2020-01-20 11:38 GMT
கர்நாடக எல்லையில் ராயக்கோட்டை ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சந்தான பாண்டியன் (வயது 27).

இவர் ஓசூரில் தங்கி சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு சந்தானபாண்டியன் ஓசூரில் உள்ள தனது அறையில் இருந்தபோது அவரது நண்பர்கள் போனில் அழைத்தனர். அதனால் சந்தானபாண்டியன் தான் வைத்திருந்த 3,500 பணத்தில் இருந்து ரூ. 500-ஐ மட்டும் சட்டை பையில் வைத்துக் கொண்டு மீதம் உள்ள ரூ. 3 ஆயிரத்தை அறையிலேயே வைத்துவிட்டு சென்றார்.

நேற்று காலை கர்நாடக மாநிலம் மாலூரில் சாலையோரத்தில் சந்தான பாண்டியன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை மற்றும் கன்னத்திலும் காயம் இருந்தது. அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் உள்ள மதுக்கடை அருகில் இருந்தது.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற மாலூர் போலீசார் இறந்துகிடந்த சந்தானபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அவரது உடலின் அருகில் பாறாங்கற்கள் கிடந்ததால் அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்த சந்தான பாண்டியனின் சகோதரர் பிருத்விராஜ், மாலூர் போலீசில் புகார் அளித்தார். அதில் சின்ன எலசகிரியை சேர்ந்த பெண்ணும், சந்தானபாண்டியனும் காதலித்து வந்ததாக தெரிவித்தார். அதேபோல் ராயக்கோட்டை பாஞ்சாலி நகரைச் சேர்ந்த ஒருவருக்கும், சந்தானபாண்டியனுக்கும் இடையே பிரச்சினை இருந்ததாகவும் இதனால் அவர்கள் 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி உள்ளார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்படு வதற்கு முன்பு சந்தானபாண்டியனுக்கு போனில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதன்பிறகு தான் அவர் ஓசூரில் இருந்து மாலூர் சென்றுள்ளார். அங்கு அவர் கொலை செய்யப்பட்டதால் அவரது செல்போனை மாலூர் போலீசார் கைப்பற்றி கடைசியாக வந்த செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சந்தானபாண்டியனின் அறையில் அவருடன் தங்கி இருந்த நண்பர்களையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் ராயக்கோட்டை ஜெ.ஜெ. நகருக்கும் சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

கொலை செய்யப்பட்ட சந்தானபாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று இரவு அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News