செய்திகள்
பஞ்சாயத்து தலைவி ரேகாராமு.

சாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி

Published On 2020-01-20 10:48 GMT   |   Update On 2020-01-20 10:48 GMT
பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பெண், தனது சாப்ட்வேர் பணியை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதாக கூறுயுள்ளார்.

சென்னை:

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். சிலரது தொடக்கம் அமர்க்களமாக தெரிகிறது. சென்னை வில்லிவாக்கம் அருகே உள்ளது பாண்டேஸ்வரம் கிராம பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ரேகா ராமு வெற்றி பெற்றார்.

இவர் சாப்ட்வேர் துறையில் கைநிறைய சம்பாதித்து வந்தவர். அதேபோல் இவரது கணவரும் சாப்ட்வேர் துறையில் மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம் வாங்கியவர்.

இருவரும் அந்த வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள்.

ரேகா ராமுவின் மாமனார் குடும்பம் அரசியல் செல்வாக்கு பெற்ற குடும்பம். அந்த பின்புலத்தில் ரேகா எளிதில் வெற்றியும் பெற்றார்.

பஞ்சாயத்து தலைவர் பணியை தொடங்கி உள்ள ரேகா ராமு கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். முதலில் கீரை வகைகளை பயிர் செய்தோம். இப்போது பாரம்பரிய நெல்வகைகளையும் பயிர் செய்து வருகிறோம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பாண்டேஸ்வரம் பகுதி மக்களின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. ஏரிகளில் மணல் திருட்டு, பெருகி வரும் செங்கல் சூளைகள் ஆகியவற்றால் விவசாயம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதிகாரம் இருந்தால்தான் எதையும் செய்ய முடியும். இப்போது அதிகாரம் எனக்கு வந்துள்ளது. நிச்சயமாக பாண்டேஸ்வரத்தில் மாற்றங்களை கொண்டு வருவேன்.

இவ்வாறு ரேகா ராமு கூறினார்.

இதேபோல் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியத்தின் துணை தலைவராக இருப்பவர் பன்னீர்செல்வம் (வயது 45). மொத்த காய்கறி வியாபாரியான இவர், சமூக சேவை செய்வதில் ஆர்வம் உடையவர்.

துணைத்தலைவர் ஆனாலும் தனது மொத்த காய்கறி விற்பனை வியாபாரத்தை விடவில்லை, தினமும் அதிகாலையில் எழுந்திருக்கும் பன்னீர்செல்வம், தானே மினி ஆட்டோ ஓட்டி கொண்டு பல இடங்களுக்கு சென்று காய்கறிகளை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து கொண்டு வந்து சென்னிமலை டவுன், மற்றும் சுற்றுபுறங்களில் உள்ள காய்கறிகடைகளுக்கு விற்பனை செய்கிறார்.

காலை 9.30 மணிக்குள் தனது காய்கறி வியாபாரத்தினை முடித்து கொள்ளும் இவர் தனது துணை தலைவர் பணியை செய்கிறார்.

துணைத்தலைவர் பதவி கிடைத்தாலும் வியாபாரத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளேன்.

மக்கள் எனக்கு சேவை செய்ய கொடுத்த பதவி 5 ஆண்டுகள் தான். ஆனால் என்னுடைய வியாபாரம் விவசாயிகள், மக்களுக்கு பாலமாக உள்ளது. இந்த வியாபாரத்தில் குறைந்த வருமானம்தான் வருகிறது. இருந்தாலும் மன நிறைவுடன் இதை நான் செய்து வருகிறேன். அதுதான் என்னை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. இந்த தொழிலால் தினமும் எனக்கு ஓட்டு போட்ட 30 பேரையாவது பார்த்துவிடுகிறேன். இதனால் அவர்களின் குறைகளையும் கேட்டு தீர்வு காண வாய்ப்பாக அமைகிறது.

நான் தேர்தலில் வெற்றி பெற்றதால் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஆர்டர் கொடுத்துள்ளேன், அதை வீடு வீடாக சென்று கொடுத்து நன்றி சொல்ல உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News