செய்திகள்
கொள்ளையடிக்கப்பட்ட ஆதீஸ்வரர் கோவில்

ஆதீஸ்வரர் கோவிலில் பழமையான 13 சிலைகள் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2020-01-20 03:40 GMT   |   Update On 2020-01-20 03:40 GMT
தஞ்சையில் 600 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் கோவிலில் 13 சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தை புதுக்குளம் ஜைனமுதலி தெருவில் ஆதீஸ்வரர் கோவில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தவுடன் கோவில் ஊழியர்கள் கதவை பூட்டிவிட்டு சென்றனர். இந்த கோவில் வாசலில் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் காலையில் கோலமிடுவது வழக்கம்.

நேற்று காலை வழக்கம் போல அந்த பெண் கோலமிட வந்தார். அப்போது சன்னதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் இது குறித்து கூறினார்.

இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் கோவிலின் பின்புறமாக சுற்றுச்சுவரில் மர்மநபர்கள் ஏறி, கோவிலுக்குள் சென்று சன்னதிகளின் கதவுகளை கியாஸ் வெல்டிங் மூலம் துண்டித்து, பின்னர் அங்கிருந்த சாமி சிலைகளை கொள்ளையடித்து கொண்டு தாங்கள் பிடிபடாமல் இருக்க மிளகாய் பொடியை வீசிவிட்டு கோவிலின் பின்புற கதவை திறந்து மர்மநபர்கள் தப்பிச்சென்றதும் தெரியவந்தது.

ஆதீஸ்வரர் கோவிலில் இருந்து 3 அடி உயர ஆதீஸ்வரர் ஐம்பொன் சிலை, வெண்கலத்தால் ஆன 1 அடி உயர மகாவீரர், 1½ அடி உயர சரஸ்வதி, ஜோலமாலணி, 1 அடி உயர பஞ்சமேரு, முக்கால் அடி உயர நவக்கிரக தீர்த்தங்கார் உள்ளிட்ட 13 சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

கொள்ளை போன சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கானார் பஜனை கோவில் தெருவில் சத்தியபாமா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி பஜனை கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தபின் வழக்கம்போல் கோவில் பூட்டப்பட்டது. நேற்று காலை அர்ச்சகர் ராஜேஷ் கோவிலில் உள்ள முன்பக்க சுற்றுச்சுவர் கேட்டை திறந்துகொண்டு உள்ளே சென்றார்.

அப்போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கிரில்கேட்டில் இருந்த பூட்டும் உடைக்கப்பட்டு கருவறையில் இருந்த சத்தியபாமா, ருக்மணி சாமிகளுக்கு நடுவில் இருந்த 3½ அடி உயரமுள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேணுகோபால் சுவாமி சிலை திருட்டு போயிருந்தது. திருட்டுப் போன சிலையின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிலை திருடிய மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News