செய்திகள்
கொலை

ராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு பிளஸ்-2 மாணவன் கொலை

Published On 2020-01-19 09:55 GMT   |   Update On 2020-01-19 09:55 GMT
ராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் பிளஸ் 2 மாணவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராசிபுரம்:

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடி காமாட்சிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 17). இவர் நெய்காரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் வெங்கடேசன், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், தொட்டியவலசு பஞ்சாயத்துக்கு உட்பட்ட அல்லேரி முனியப்பன் கோவில் அருகே வறண்ட ஏரி பகுதியில் குருவி பூக்கள் பாறை என்ற இடத்தில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இது குறித்து ராசிபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பி ரண்டு விஜயராகவன், ராசிபுரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேசன் உடலை பார்வையிட்டனர். யாரோ, அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதில், ஒரு பக்கம் முகம் சிதைந்து காணப்பட்டது.

கொலை தான் என உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து துப்பறியும் மோப்ப நாய் பொய்கை சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைத்து, மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. அது சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர், வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுபற்றி மாணவனின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து வெங்கடேசன் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள், கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க அங்கிருந்த போலீசாரிடம் கூறினர்.

இதற்கிடையே கொலை சம்பவம் குறித்து கீரனூர் தொட்டிய வலசு கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஸ்வரன், ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கொன்றவர்கள் யார்? எதற்காக தீர்த்துக் கட்டினார்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக போலீசார், தொட்டியவலசு அல்லேரி முனியப்பன் கோவில் அருகே வசிக்கும் பொதுமக்களிடம் கொலை நடப்பதற்கு முன் வெங்கடேசனை பார்த்தீர்களா?, அவருடைய நண்பர்கள் யாரேனும் இந்த பகுதியில் உள்ளனரா? என விசாரித்தனர்.

இதில் பொதுமக்கள் அளித்த தகவல்களை பதிவு செய்த போலீசார் அடுத்தக் கட்டமாக, மாணவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று வீட்டில் இருந்து வெங்கடேசன் வெளியே எப்போது புறப்பட்டார்?, யாரிடமாவது தகராறு ஏற்பட்டு உள்ளதா? என விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவல்களை வைத்து கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் கொலையாளிகள் குறித்து குற்றப்பிரிவு போலீசார், எஸ்.பி.சி.ஐ.டி. போலீசார், ஓ.சி.ஐ.யூ உள்ளிட்ட உளவு பிரிவு போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிளஸ்-2 மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம், மல்லூர் காமாட்சிகாடு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மத்தியில், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News