செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

புதுவை ரெயின்போ நகரில் நிதிநிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை

Published On 2020-01-18 14:47 GMT   |   Update On 2020-01-18 14:47 GMT
புதுவை ரெயின்போ நகரில் நிதிநிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்து மர்ம நபர்கள் ரூ.3½ லட்சம் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

புதுச்சேரி:

புதுவை ரெயின்போநகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது36). இவர் புதுவையில் தனியார் நிதிநிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியை சின்னகரையாம் புத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் பொங்கல் பண்டிகையை கொண்டாட ரமேசும் சின்னகரையாம் புத்தூருக்கு சென்றார்.

பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று மதியம் ரமேஷ் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன .

பீரோவில் வைத்திருந்த 4 பவுன் ஆரம், 3 பவுன் நெக்லஸ், 2 பவுன் செயின், ஒரு பவுன் குருமாத்து மற்றும் ½ பவுன் மோதிரங்கள் 4 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3½ லட்சம் ஆகும்.

யாரோ மர்ம நபர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து ரமேஷ் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளை குறித்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

கொள்ளை நடந்த இடம் எப்போதும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகும். அப்படி இருந்தும் மர்ம நபர்கள் துணிச்சலாக வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News