செய்திகள்
சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி.

டீ கேனில் சுகாதாரமற்ற தண்ணீர் பிடித்த விவகாரம்- எழும்பூர் ரெயில் நிலைய கடைக்கு சீல்

Published On 2020-01-18 05:37 GMT   |   Update On 2020-01-18 05:37 GMT
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் டீ கேனில் சுகாதாரமற்ற தண்ணீரை பிடித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட தேநீர் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை:

ரெயில்களில் விற்கப்படும் டீ, காபி வெறும் தண்ணீர் மாதிரிதான் இருக்கும் என்பது பயணிகளுக்கு தெரிந்ததுதான். இதேபோல் டீ, காபி மற்றும் உணவுப்பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. 

இந்நிலையில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் 7-வது நடைமேடைக்கு ரெயில் ஏற வந்த பயணியின் கண்களில், ஒரு காட்சி பட்டிருக்கிறது.

அங்குள்ள டீ கடை ஊழியர் ஒருவர் ரெயில் பெட்டிகளை சுத்தப்படுத்தவும், கழிவறைகளுக்கு பயன்படுத்தவும் பைப் லைனில் சப்ளை செய்யப்படும் தண்ணீரை டீ கேனில் பிடித்துள்ளார்.

அதை பார்த்த அந்த பயணி வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டார். டீ, காபி தயாரிப்பதற்கு சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்துவதாக பலர் கருத்துக்களை பதிவிட்டனர். கடந்த இரண்டு நாட்களாக வைரலாக பரவி வரும் இந்த காட்சி ரெயில் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது ரெயில்வே உயர் அதிகாரிகள் பார்வைக்கு சென்றது. இதையடுத்து அந்த கடையை உடனடியாக மூட ரெயில்வே கோட்ட மேலாளர் உத்தரவிட்டார். இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த தண்ணீர் டீயில் கலக்க பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். பால் கேனில் இரண்டு பகுதிகள் உள்ளன. உள் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் பால் சூடாக இருப்பதற்காக வெளிப்பகுதியில் வெந்நீர் நிரப்பப்படும். அதற்குத்தான் கடை விற்பனையாளர் அந்த தண்ணீரை பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

‘கழிவறைகளுக்கு பயன்படுத்தும் தண்ணீரை டீ தயாரிக்க பயன்படுத்துவதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் தவறானது.

சுத்தப்படுத்தும் பணிகளுக்காக குழாய்களில் அனுப்பப்படும் தண்ணீரை அந்த விற்பனையாளர் கேனில் பிடித்துள்ளார். அந்த தண்ணீர் மெட்ரோ வாட்டர் மூலம்தான் சப்ளை செய்யப்படுகிறது. அதே தண்ணீர்தான் நடைமேடைகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும் சப்ளை செய்யப்படுகிறது.

இந்த தண்ணீர் குளோரின் கலக்கப்படுவதால் பாலில் கலக்கவும் முடியாது. அப்படி கலந்தால் பால் கெட்டு விடும். உணவு தயாரிப்புகளுக்கு ஆர்.ஓ. தண்ணீரை பயன்படுத்தும்படி கடை உரிமையாளர்கள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்தும் வருகிறார்கள்.

7-வது நடைமேடையில் இந்த ஒரு கடைக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இப்போது அந்த கடை மூடப்பட்டு விட்டதால் பயணிகளுக்குத்தான் சிரமம்’ என்று ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News