செய்திகள்
நாராயணசாமி

பொங்கல் பண்டிகை - புதுவை தலைவர்கள் வாழ்த்து

Published On 2020-01-14 09:00 GMT   |   Update On 2020-01-14 09:00 GMT
தை திங்கள் பிறப்பு முட்டுக்கட்டைகள் நீங்கி, நம் மாநிலத்துக்கு வளர்ச்சியையும், மக்களுக்கு செழிப்பினையும் நிச்சயம் அளிக்கும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்ற புகழ்பெற்ற தமிழ்குடியின் திருநாளாம் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும் தருணம் இது.

தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகள் வெறும் சடங்குகள் அல்ல. நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த தத்துவங்கள் அவை. அறுவடை திருநாள் என்று அழைக்கப்பெறும். இந்த பொங்கல் திருநாளும் அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அறிவியல் வளராத அக்காலத்திலேயே உலகின் இயக்கத்துக்கு கதிரவன் இன்றியமையாது எனும் உண்மையை உணர்ந்த தமிழர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த திருநாளைக் கொண்டாடுவது நம் அறிவியல் அறிவினை உலகுக்கெல்லாம் எடுத்துக் காட்டக்கூடிய ஒன்றாகும்.

உழவினையும், உழவரையும் மையப்படுத்தி கொண்டாடப்படும் இந்த திருநாளை விவசாயத்தின் பெருமையினை நமக்கு உணர்த்துகிறது. உழவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்தால்தான் உலகம் தழைக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவை அரசு இலவச அரிசி திட்டத்தினை செயல்படுத்தி வருவதன் மூலமாக பசிப்பிணி அகற்றப்படுவதுடன் விவசாயிகளுக்கும் நன்மை கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் நெல், அரிசியினை கொள்முதல் செய்யும்போது நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு பலன் கிடைக்கிறது. ஆனால் மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரிசி பதிலாக பணம் கொடுக்க நிர்ப்பந்திப்பதால் தற்போது புதுவையில் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படுகிறது. விவசாயத்தின் அடிப்படையான கதிரவனுக்கு மட்டுமல்ல அதற்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் வீரம் பாராட்டு ஜல்லிக்கட்டு விழா இந்த திருநாளின் சிறப்பம்சமாகும்.

நம் மறம் செரிந்த விளையாட்டினை மறைக்கும்பொருட்டும், உள்நாட்டு மாட்டினங்களை அழிக்க நினைக்கும் உலகளாவிய கும்பலுடன் கைகோர்த்து ஜல்லிக்கட்டினை அழிக்க நினைத்தவர்களுக்கு தமிழர்களின் போராட்டங்கள் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. புதுவை அரசு ஜல்லிக்கட்டினை பாதுகாக்கும் பொருட்டு, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவந்து ஜல்லிக்கட்டிற்கு சட்ட அங்கீகாரம் பெற்று தந்தது.

காணும் பொங்கலை பெரியோரிடம் ஆசிபெறும் நம் வழக்கம். இது தமிழர்களின் உயரிய கலாச்சாரத்தின் பறைச்சாற்றுகிறது. ஒருவரையொருவர் நேரில் பார்ப்பதே அரிதாகிப்போன இன்றைய பரபரப்பான சூழலில் இந்த நன்னாளில் நம் வீட்டில் உள்ள அனைவரையும் பெரியோரிகளிடம் ஆசி பெற நாம் அவசியம் அழைத்துசெல்கிறோம். இது பெரியவர்களுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும் அவர்களின் பரிபூரண ஆசியும் நமக்கு கிடைக்கும்.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நமது பழமொழி. எனவே, இந்த தை திங்கள் பிறப்பு, முட்டுக்கட்டைகள் நீங்கி, நம் மாநிலத்துக்கு வளர்ச்சியையும், மக்களுக்கு செழிப்பினையும் நிச்சயம் அளிக்கும். இந்த தை திருநாளில் புதுவை மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரங்கசாமி (எதிர்கட்சி தலைவர்):-

அனைத்து தரப்பு மக்களும் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும். அனைவரின் துயரங்களும் தீரவேண்டும். நாட்டில் வளமும், மகிழ்ச்சி, வேளாண்மை மற்றும் சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும்.

தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பதுபோல் இந்த தமிழ் புத்தாண்டு இனிமையான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் மக்களுக்கு அமைய வேண்டும் என்று எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சபாநாயகர் சிவக்கொழுந்து:- தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை புதுவை மற்றும் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாது உகலமெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவரும் சாதி மத பேதங்களை எல்லாம் புறந்தள்ளி ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

மத வேற்றுமைகளை, துவே‌ஷத்தை, சாதிபாகுபாடுகளை அறவே ஒழிக்க இந்த நன்னாளில் சூளுரைப்போம். மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று, பெருவாழ்வு வாழ உளமார வாழ்த்தி அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பொங்கல் பண்டிகை திருநாளில் அனைவர் வாழ்க்கையிலும் இன்பம் பொங்க வேண்டும். இல்லறம் மகிழவேண்டும். நல்லறம் உருவாக வேண்டும். நாடு செழிக்க வேண்டும். நாட்டு மக்கள் சிறக்க வேண்டும். விவசாய பெருமக்கள் கவலையின்றி வாழ வேண்டும். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் நிறைவேற்றப்படவேண்டும். உழவர் பெருமக்கள், உழவர்களுக்கு உதவுகின்ற கால்நடைகளின் தன்னலமற்ற உழைப்பை இந்த பொங்கல் திருநாளில் போற்றி வணங்குவோம். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் ஷாஜகான்:- தமிழர்களின் ஒப்பற்ற திருநாளான தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும், பாசமிகு எனது புதுவை மாநில மக்களுக்கும் தெரிவிப்பதில் அளவற்ற ஆனந்தமும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.

ஒரு மனிதனுடைய வாழ்வில் நன்றி உணர்வு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நமது தமிழ்த்திருநாள் மிகவும் வலியுறுத்தி காட்டுகிறது. உலக உயிர்கள் வாழ பாடுபடுபவர்களுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்கிறார் நபிகள் நாயகம் என்பதை இந்நாளில் நினைவுபடுத்தி அன்பும், அமைதியும் தழைத்தோங்கும் நாளாக இத் தைப்பொங்கல் திருநாள் அமையட்டும் என்று கூறி மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

வைத்திலிங்கம் எம்.பி.:- நம்மை மகிழ்ச்சியுடன் உலகில் வாழ வைக்கும் இயற்கைக்கு நன்றி கூறுவோம். அதுபோல் பொங்கல் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்த பரிமாறிக் கொள்ளாமல் அருகில் உள்ளவர்களை நேரில் சந்தித்து தெரிவிப்போம். மேலும் தமிழையும், தமிழர் பண்பாட்டையும் சமூக வலைதளத்தில் வளர்க்காமல் நமது வாழ்விலேயே கடைபிடித்து வளர்க்கவும் இத்திருநாளில் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒரு முறை புதுவை மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


Tags:    

Similar News