செய்திகள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் திறந்து விடப்படும் வாடிவாசல்

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்

Published On 2020-01-14 08:00 GMT   |   Update On 2020-01-14 08:00 GMT
பொங்கல் திருநாளான நாளை அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. இதற்கு அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை:

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு அலங்காநல்லூரில் நடைபெறும்.

இதற்கு தடை விதிக்கப்பட்டபோது தமிழகமே பொங்கி எழுந்தது. இதன் பயனாக காளைகள் துள்ளிக்குதிப்பதும் அதனை அடக்க வீரர்கள் பாய்வதும் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்றது மதுரை. இங்கு பொங்கல் திருநாளில் அவனியாபுரத்திலும், மறுநாள் (16-ந் தேதி) பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு மகிழ்வர்.

3 நாட்கள் தான் ஜல்லிக்கட்டு என்றாலும், வீரர்களுக்கு பயிற்சி, காளைகளுக்கு பயிற்சி ஓரிரு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். பயிற்சி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு கமிட்டியிடம் பதிவு செய்து விட்டனர்.

பொங்கல் திருநாளான நாளை (15-ந் தேதி) அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. இதற்கு அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நின்று ரசிக்க பேரிகார்டுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம், பெருங்குடி, அவனியாபுரம், வளையங்குளம் பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும்.

இதற்காக கால்நடைத்துறை துணை இயக்குநர் சரவணன் தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் முதல் காளைகள் வரத் தொடங்கின.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, நாளை காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைக்கிறது.

முதலில் நாட்டாமைக்கு சொந்தமான காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும். அதனை பிடிக்க 700 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்கள், குழுவாக களம் இறக்கப்படுவார்கள்.

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இந்த குழு மாற்றப்பட்டு, மற்றொரு குழு இறக்கப்படும். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பித்தளை அண்டாக்கள், சைக்கிள், குத்துவிளக்கு, வேஷ்டி-துண்டு போன்றவை பரிசாக வழங்கப்பட உள்ளன.

ஜல்லிக்கட்டை பலரும் கண்டு களிக்க வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்களும் அமைக்கப்பட்டுள்ளன.



மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் காவல்துறையினர் விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்தனர்.

16-ந் தேதி காலை, மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. கிராம பொது மகாலிங்கசாமி மடத்து கமிட்டி சார்பில் மஞ்சள்மலைசாமி ஆற்று திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 700 காளைகள் களம் இறங்க உள்ளன. அவைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டன.

காளைகளை பிடிக்க பாயும் காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்துள்ளது. பார்வையாளர்கள் அமரும் காலரி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அங்குள்ள கோட்டை முனிசாமி திடலில் வாடிவாசல் அருகில் முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வினய் தலைமையில் ஜல்லிக்கட்டு பணிகள் தொடங்கின. போட்டியை காணவரும் பார்வையாளர்கள் அமரும் காலரி, தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன.

அலங்காநல்லூர், பாலமேட்டில் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்படும். அதனை யாரும் பிடிக்க மாட்டார்கள்.

அதன் பிறகே வாடிவாசல் வழியாக பதிவு செய்யப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படும்.

அலங்காநல்லூரில் களம் இறங்க 700 காளைகள் டோக்கன் பெற்றுள்ளன. இந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்து விட்டன.

இதேபோல் 800 மாடு பிடி வீரர்கள் பதிவு செய்யப்பட்டு களம் இறங்க தயாராக உள்ளனர்.

வாடிவாசல் முன்பு தென்னை நார்கள் பரப்பப்பட உள்ளது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளை பிடிக்க ஒரு முறைக்கு 80 வீரர்கள் களம் இறக்கப்படுகின்றனர்.

ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை அவர்கள் மாற்றப்பட்டு, அடுத்த குழு களம் இறக்கப்படும்.

ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்படுகளையும் அலங்காநல்லூர் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதை பலரும் பெருமையாக கருதுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் விலாம்பட்டியை சேர்ந்த ரேணுகாதேவி கூறுகையில், கடந்த 23 வருடங் களாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு காளையை கொண்டு வந்து பல பரிசுகளை பெற்று சென்றுள்ளேன்.

வீரம் நிறைந்த இந்த ஊர் ஜல்லிகட்டில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன் என்றார்.

Tags:    

Similar News