செய்திகள்
கிரண்பேடி

புதுவை மக்களை நாராயணசாமி தவறாக வழி நடத்த பார்க்கிறார்- கிரண்பேடி புகார்

Published On 2020-01-12 14:55 GMT   |   Update On 2020-01-12 14:55 GMT
உண்மைக்கு மாறாக கூறி புதுவை மக்களை முதல்வர் நாராயணசாமி தவறாக வழி நடத்த பார்க்கிறார் என்று கவர்னர் கிரண்பேடி புகார் கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிகாரம் பெற்ற மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீண்ட காலமாக ஆணையாளர் நியமிக்கப்படாமல் இருந்தது.

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பபட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தேர்தல் ஆணையாளரை நியமித்து தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கவர்னரின் அறிவுறுத்தலின்படி உள்ளாட்சித்துறை கடந்த ஜுலை மாதம் 8-ந் தேதி தன்னிச்சையாக மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டது. இது காங்கிரஸ் ஆட்சியாளர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி கூடிய சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும், புதிய மாநில தேர்தல் ஆணையாளராக ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எம்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

இவர் விதிமுறைகளின் படியும் சட்டப்படியும் நியமிக்கப்படவில்லை என டிசம்பர் 18-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது இதனை சுட்டிக்காட்டி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது செல்லாது என கவர்னர் கடந்த 20-ந் தேதி ஒரு ஆணை பிறப்பித்தார்.

இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையாளரை நீக்க கவர்னர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

மேலும் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் சிறப்பு அதிகாரி தேவநீதிதாசை ஆணையாளராக நியமிக்கவே கிரண்பேடி முயற்சிக்கிறார் எனவும் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

இதற்கு கவர்னர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் நாராயணசாமி தேர்தல் ஆணையர் மற்றும் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக மீண்டும் மீண்டும் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை தவறாக வழி நடத்த பார்க்கிறார்.

கவர்னர் மாளிகையில் நான் நீடிக்கும் வரை தேவநீதிதாஸ் அவரது அனுபவம் ஒழுக்கம் மக்களுக்கான சேவை கவர்னர் மாளிகைக்கு தேவைப்படுகிறது. அவரது தனிப்பட்ட ஆலோசனைகள் பயனுள்ளதாக உள்ளது

தாங்கள் நினைப்பது போல் அவர் எந்த பதவிக்கும் வர விரும்பவில்லை. தாங்கள் அடிக்கடி பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதால் மக்களுக்கு தங்கள் மீது நம்பிக்கை குறைவு ஏற்படும். முதல்-அமைச்சர் அலுவலகத்தின் கண்ணியத்தை காப்பாற்றுங்கள்.

தேர்தல் ஆணையர் நியமனம் மற்றும் இலவச அரிசி தொடர்பான பிரச்சினைகள் உயர்நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.

இவ்வாறு கிரண்பேடி கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News