செய்திகள்
கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்த மத்திய மந்திரி

தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகள் திறக்க மத்திய அரசு தயார் - மத்திய மந்திரி

Published On 2020-01-11 16:58 GMT   |   Update On 2020-01-11 16:58 GMT
தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகள் திறக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று ராமேசுவரம் வந்த மத்திய மந்திரி கூறினார்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் கோவிலுக்கு நேற்று மத்திய மனிதவளமேம்பாட்டுதுறை மந்திரி ரமேஷ் போக்ரியால் நிஷாங் வருகை தந்தார். அவர் சாமி-அம்பாள், நடராஜர், ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார். பின்பு உலக பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தை பார்த்து ரசித்தார்.

தொடர்ந்து ராமேசுவரம் ராமர்பாதம் செல்லும் சாலையில் சவுந்தரிஅம்மன்கோவில் அருகே மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன், தாசில்தார் அப்துல்ஜபார், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து மத்திய மந்திரி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது. தமிழக அரசு ஒத்துழைக்கும் பட்சத்தில் நவோதயா பள்ளிகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும். ராமேசுவரத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்பு மத்திய மந்திரி அங்கிருந்து கார் மூலமாக மண்டபத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்றார். அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாடினார்.
Tags:    

Similar News