செய்திகள்
மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)

மெட்ரோ ரெயிலில் சிறப்பு வகுப்பு பெட்டியில் பயணிகள் அதிகரிப்பு

Published On 2020-01-11 08:46 GMT   |   Update On 2020-01-11 08:46 GMT
மெட்ரோ ரெயிலில் சிறப்பு வகுப்பு பெட்டியில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சிறப்பு வகுப்பு பெட்டியில் 1,546 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள்.
சென்னை:

சென்னை நகரில் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை- விமான நிலையம், சென்ட்ரல்- பரங்கிமலை வரை மெட்ரோ ரெயில் வழித்தடப் பாதையில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் நடந்து வருகிறது.

மெட்ரோ ரெயிலில் சிறப்பு வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற பெட்டிகளில் பயணம் செய்யும் கட்டணத்தை விட அதிகமாக இருக்கும்.

மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டபோது கட்டணம் அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர். ஆனால் பின்னர் மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. தற்போது சராசரியாக மாதந்தோறும் 1.15 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்கட்ட பணிகள் முழுமையாக முடிந்ததையடுத்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. ஆனால் சிறப்பு வகுப்பு பெட்டியில் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் சிறப்பு வகுப்பு பெட்டியிலும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சிறப்பு வகுப்பு பெட்டியில் 1,546 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் 978 பேர் மட்டுமே பயணம் செய்து இருந்தனர். தற்போது 58 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 9,617 பேர் சிறப்பு வகுப்பு பெட்டியில் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த டிசம்பர் மாதம் சிறப்பு வகுப்பு பெட்டியில் 1,546 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஒருமுறை மட்டுமே பயணம் செய்வார்கள். 1,508 பேர் கவுண்டரில் டிக்கெட் வாங்கி உள்ளனர். மற்றவர்கள் ஸ்மார்ட் கார்டு மற்றும் டூரிஸ்ட் கார்டுகளை பயன்படுத்தி உள்ளனர்.

மே, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் சிறப்பு வகுப்பு பெட்டியில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து இருந்தது.

தற்போதைக்கு சிறப்பு வகுப்பு பெட்டிகளை சாதாரண பெட்டிகளாக மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்றார்.
Tags:    

Similar News