செய்திகள்
நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணன் சேலம் சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார்

Published On 2020-01-11 04:17 GMT   |   Update On 2020-01-11 04:17 GMT
கோர்ட் ஜாமீன் வழங்கியதையடுத்து நெல்லை கண்ணன் சேலம் சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார். அவரை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
நெல்லை:

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்‌ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக, மேலப்பாளையம் போலீசார் நெல்லை கண்ணன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை பெரம்பலூரில் கைது செய்தனர். பின்னர் அவர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 2 நாட்களாக நடந்தது. இதை தொடர்ந்து நீதிபதி நசீர் அகமது, நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தினமும் காலையிலும், மாலையிலும் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் நெல்லை கண்ணன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

நெல்லை கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து சேலம் சிறையில் இருந்த நெல்லை கண்ணன் இன்று காலை சிறையில் இருந்து விடுதலையானார். அவரை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
Tags:    

Similar News