செய்திகள்
ஜல்லிக்கட்டு

பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா?

Published On 2020-01-10 06:13 GMT   |   Update On 2020-01-10 06:43 GMT
பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அவனியாபுரம்:

மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். மாவட்டத்தில் இங்கு முதலில் நடக்கும் ஜல்லிக்கட்டு என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆண்டுதோறும் நடத்திவந்த வேளையில் கடந்த ஆண்டு இதில் இருந்து பிரிந்த ஒரு தரப்பினர் அவனியாபுரம் கிராம மக்கள் கமிட்டி என்ற புதிய அமைப்பை தொடங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இரு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு குழப்பம் நிலவியது. இந்த பிரச்சினை தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை அரசு ஏற்பாட்டில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு சுமூகமாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது.

இந்த ஆண்டும் இரு தரப்பினருக்கும் இடையே அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தென்கால் பாசன விவசாய சங்கத்தினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அரசு உத்தரவிட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை அங்கு வாடிவாசல், காலரிகள், தடுப்புகள் ஏதும் அமைக்கப்படவில்லை. காளை மற்றும் மாடுபிடி வீரர்களின் பதிவுகள் நடத்தப்படவில்லை. இன்னும் போட்டிக்கு 4 நாட்களே இருக்கின்றன. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அவனியாபுரத்திற்கு அடுத்த நாள் 16-ந்தேதி பாலமேடு, 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அங்கு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவனியாபுரத்தில் தற்போது வரை எந்த ஏற்பாடும் செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது.

இதனிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாவட்ட கலெக்டர் வினய் விடுத்துள்ள அறிக்கையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்தவொரு தனி நபர் மற்றும் விழாக்குழுவினரிடமோ நன்கொடை, பரிசு பொருட்கள் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான நன்கொடை செலுத்த விரும்புபவர்கள் மாவட்ட கலெக்டர், மதுரை என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காசோலையாகவோ அல்லது டி.டி.யாகவோ வழங்கலாம்.

பரிசு பொருட்கள் அளிக்க விரும்புபவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அலுவல் குழுத்தலைவரான மேலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் 94438 29511 மற்றும் 0452-2546108 என்ற எண்களில் அலுவலக நேரங்களில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News