செய்திகள்
கமல்ஹாசன்

திருச்சியில் 10-ந்தேதி கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2020-01-08 06:48 GMT   |   Update On 2020-01-08 06:48 GMT
புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் வரும் 10-ந்தேதி கமல்ஹாசன் திருச்சியில் சந்திக்க இருக்கிறார்.
சென்னை:

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசன் கட்சி உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தது.

2021-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு என்று கூறிவரும் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் எதிலும் போட்டியிடவில்லை.

கிராமசபை கூட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்ததால் உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதையும் புறக்கணித்து விட்டார்.

காலில் பொருத்தப்பட்டு இருந்த பிளேட் நீக்கப்பட்டதால் மருத்துவ ஓய்வில் இருந்த கமல்ஹாசன் கடந்த வாரம் திரும்பினார். மீண்டும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட உள்ளார். கடந்த வாரம் கட்சியின் பல்வேறு அணிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் வரும் 10-ந்தேதி திருச்சியில் சந்திக்க இருக்கிறார். 600க்கு மேற்பட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நாளை மறுநாள் மதியம் 12 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து கருத்தரங்கமும் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை திருச்சியில் தொடங்கி வைக்கிறார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழ்நாடு முழுக்க 4 தலைமை அலுவலகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு சென்னை, பொள்ளாச்சி ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 3 வது தலைமை அலுவலகம் அமைகிறது.
Tags:    

Similar News