செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சினை ஏற்படாது - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

Published On 2020-01-07 11:42 GMT   |   Update On 2020-01-07 11:42 GMT
கூடுதலாக மழை பெய்ததால் புதுவையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் இறுதி வரை பெய்யும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று முன்னதாக 2-வது வாரத்தில் தொடங்கியது. ஆண்டுக்கு வடகிழக்கு பருவமழை மூலம் சராசரியாக 120 செ.மீ. மழை பெய்யும்.

இந்த ஆண்டு மழை அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்கியது. ஆனால், தொடர்ச்சியாக மழை பெய்யவில்லை. 10 நாட்கள் மட்டும் மழை பெய்தது, அதன்பின் விட்டு விட்டு மழை பெய்தது. ஒரு சில நாட்கள் இரவில் மட்டும் மழை பெய்தது.

டிசம்பர் மாதத்தில் சற்று முன்னதாகவே பனிக்காலம் தொடங்கியது. இருப்பினும் இந்த ஆண்டு வழக்கமான சராசரியை விட கூடுதலாகவே மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு சராசரியான 120 செ.மீ. மழையை விட 148 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இத்தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், தொடர்ச்சியாக மழை பெய்யாததால் இந்த மழையினால் பெரிதும் பலனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் தொடர்ச்சியாக மழை பெய்தால் வரத்து வாய்க்கால்களில் தண்ணீர் ஓடும். ஏரி, குளங்களை இந்த நீர் சென்றடைந்து தேங்கும். விட்டு, விட்டு மழை பெய்தததால் பூமியே மழைநீரை உறிஞ்சியது.

இதனால் ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை. இருப்பினும் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் புதுவையில் குடிநீருக்கு இந்த ஆண்டு பிரச்சினை ஏதும் ஏற்படாது என்றும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News