செய்திகள்
திமுக

மதுரை மாவட்ட கவுன்சில் தேர்தல் - திமுக அமோக வெற்றி

Published On 2020-01-03 07:00 GMT   |   Update On 2020-01-03 07:00 GMT
மதுரை மாவட்ட கவுன்சில் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. 6 ஊராட்சி ஒன்றியங்களை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
மதுரை:

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அனைத்து முடிவுகளும் வெளிவந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் உள்ள 23 மாவட்ட கவுன்சில் வார்டுகளில் தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதன் கூட்டணி கட்சியான பார்வர்டு பிளாக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 9 இடங்களில் வென்றுள்ளது. இதனால் மாவட்ட கவுன்சில் பதவியை திமு.க. வென்றுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. இதில் தி.மு.க. 92 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 89 வார்டுகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் 7 வார்டுகளிலும், காங்கிரஸ் 4 வார்டுகளிலும் வென்றுள்ளன.

பா.ஜனதா மற்றும் தே.மு.தி.க. தலா 3 வார்டுகளையும், சுயேச்சைகள் 16 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 214 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, செல்லம்பட்டி, திருமங்கலம் ஆகிய 6 ஒன்றியங்களில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

மதுரை கிழக்கு, அலங்காநல்லூர், மதுரை மேற்கு, மேலூர், திருப்பரங்குன்றம், சேடப்பட்டி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் தி.மு.க. அதிக வார்டுகளில் வென்றுள்ளது. உசிலம்பட்டியில் தலா 5 வார்டுகளில் வெற்றி பெற்று அ.தி.மு.க.-தி.மு.க. சம பலத்துடன் உள்ளது.

இன்னும் சில இடங்களில் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இன்று மாலைக்குள் வெற்றி விவரம் முழுமையாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News