செய்திகள்
மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம் புத்தாண்டு வாழ்த்து

Published On 2020-01-01 09:05 GMT   |   Update On 2020-01-01 09:05 GMT
எல்லோரும் எல்லாமும் பெற்று சிறப்புடன் நல்ல வண்ணம் வாழ்ந்திட வேண்டும் என்று மதுரை ஆதீனம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரை:

மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 2020-ம் ஆண்டு புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவ்வாறு தொடர் எண்ணாக காண முடியும். 2020-ஐ கூட்டினால் 4 வருகிறது. 4 பேர் சென்ற வழியில், நாம் செல்ல வேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு. 4 பேர் என்றால் நான்கு பெரியவர்கள், ஞானசம்பந்தப் பெருமான், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சென்ற வழியில் செல் என்று பொருள்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதும் நான்கு, கடவுள் என்றால் நான்கெழுத்து, தெய்வம் என்றால் நான்கெழுத்து, திசைகளும் நான்கு உண்டு. குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை, தேர்ப்படை என்பன நான்கு வகைப்படைகளாகும்.

வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா என்பன நான்கு வகைப் பாக்களாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்பன நான்கு வகைப் பொருள்கள் ஆகும்.

கிரதம், திரேதம், துவாபரம், கலி என்பன நான்கு வகை யுகங்களாகும். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியன நான்கு வகைக் கணக்குகளாகும். சாமம், தானம், பேதம், தண்டம் என்பன நான்கு வகை உபாயங்கள் ஆகும்.

பிறப்பு என்ற நான்கெழுத்தில் தொடங்கி, மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரை வணங்கி, இயற்கை என்ற நான்கெழுத்தோடு ஒன்றி, முயற்சி, கற்றல் என்ற நான்கெழுத்தை விடாமல், உழைப்பு என்ற நான்கெழுத்தினைத் தொடர்ந்து செயல்படுத்தினால், உயர்வு, சிறப்பு என்ற நான்கெழுத்தினைப் பெறலாம்.

எல்லோரும் எல்லாமும் பெற்று சிறப்புடன் நல்ல வண்ணம் வாழ்ந்திட, குருமகா சன்னிதானத்தின் ஆசிகள்.

மேற்கண்டவாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News