செய்திகள்
ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை

ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஓட்டு எண்ணிக்கை நடப்பது எப்படி?

Published On 2020-01-01 05:20 GMT   |   Update On 2020-01-01 05:20 GMT
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒவ்வொரு ஊராட்சியாக ஓட்டு சீட்டுகள் வண்ணம் வாரியாக பிரிக்கப்பட்டு 50 கட்டுகளாக கட்டி எண்ணப்பட உள்ளது. இதில் 400 பேர் ஈடுபடுகின்றனர்.
திருப்பரங்குன்றம்:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்றது. நாளை (வியாழக்கிழமை) வாக்கு எண்ணப்படுகிறது. இதில் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒவ்வொரு ஊராட்சியாக முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டு ஒரு பெரிய பெட்டியில் மொத்தமாக கொட்டப்படுகிறது. பிறகு பதிவான 4 வண்ண ஓட்டு சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. அதன் பின்பு 50 எண்ணிக்கையாக கட்டப்படுகிறது.



இதனையடுத்து 21 மேஜைகளுக்கு ஓட்டு சீட்டுகள் கொண்டு வரப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் என்று 4 வண்ண சீட்டுகளும் ஒரே சமயத்தில் தனித்தனி மேஜைகளில் எண்ணப்படுகிறது. இதன்படி பார்த்தால் குறைந்தது ஒரு ஊராட்சிக்கு சுமார் 2 மணி நேரம் ஆகும்.

இதில் ஊராட்சி மன்ற தலைவருக்கான வேட்பாளரும் அவருடன் 3 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் மற்றும் 3 முகவர்கள் மாவட்டக்குழு உறுப்பினருக்கான வேட்பாளர் மற்றும் 5 முகவர்கள் அனுமதிக்கப்படுவர்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் 21 மேஜைகள் போடப்பட்டு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது மேலும் ஒவ்வொரு சுற்றிலும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஊராட்சியாக எண்ணப்பட்டு ஒலிபெருக்கி மூலம் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். ஒரு ஊராட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய அடுத்த நிமிடம் மற்றொரு ஊராட்சிக்கு அழைக்கப்பட்டு அந்த ஊராட்சிக்கான வாக்குச்சீட்டுகள் பிரிக்கும் பணி தொடங்கி நடைபெறும் இதன்படி ஓட்டு எண்ணிக்கை நள்ளிரவு 12 மணிக்கு வரை நடக்கலாம் அல்லது 3-ந்தேதி அதிகாலை வரை நடக்கலாம்என்று தேர்தல் நடத்தும் அலுவலர் வட்டாரங்கள் தெரிவித்தன.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை பொருத்தவரை வாக்கு எண்ணும் பணியில் 400 பேர் ஈடுபடுகின்றனர். மேலும் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
Tags:    

Similar News