செய்திகள்
கம்ப்யூட்டர் திருடுபோன செல்போன் பாதுகாப்பு மையம்

மீனாட்சி அம்மன் கோவில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் கம்ப்யூட்டர் திருட்டு

Published On 2020-01-01 03:40 GMT   |   Update On 2020-01-01 03:40 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் கம்ப்யூட்டர் திருட்டு போன சம்பவத்தில், முன்விரோதம் காரணமாக திருட்டு நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் தங்களின் செல்போன்களை கோவிலின் ஒவ்வொரு கோபுரத்தின் அருகிலும் அமைக்கப்பட்டுள்ள காலணி பாதுகாப்பு இடத்தில் உள்ள செல்போன் பாதுகாப்பு மையத்தில் வைத்துச் செல்வார்கள்.

அவ்வாறு வைக்கப்படும் செல்போன் ஒன்றுக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு, அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் ரசீது கொடுக்கப்படுகிறது. மேலும் காலணி மற்றும் செல்போன் பாதுகாப்பு மையங்களை மகளிர் சுயஉதவிக்குழு மூலம் கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. பகல் நேரத்தில் பெண்களும், இரவு நேரங்களில் ஆண்களும் இங்கு பணியில் இருப்பார்கள்.

அதன்படி நேற்று முன் தினம் இரவு கிழக்கு ராஜகோபுரம் காலணி பாதுகாப்பு இடத்தில் ஒருவரும், செல்போன் பாதுகாப்பு மையத்தில் ஒருவரும் பணியில் இருந்தனர். கோவில் நடை சாத்திய பின்பு, பக்தர்கள் அனைவரும் சென்ற பிறகு அவர்கள் இருவரும் இரவு 11 மணிக்கு மேல் அந்த இடத்திலேயே படுத்து தூங்கி விட்டனர்.

மீண்டும் நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது செல்போன் பாதுகாப்பு மையத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் மவுஸ் ஆகியவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் கோவில் இணை கமிஷனர் நடராஜன் முன்னிலையில் அங்கு பணியில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து அவர்கள் வழக்கு எதுவும் கொடுக்காமல் அவர்களது கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்ததால் திருடு போன கம்ப்யூட்டருக்கு பதில் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்தனர். அதனை தொடர்ந்து இது தொடர்பாக எவ்வித புகாரும் கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் கொடுக்கவில்லை.

ஆனால் போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது அங்கு வேலை பார்த்த 2 பேர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. எனவே அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் திருட்டு சம்பவத்தில் சிக்க வைக்க இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம். எனவே தான் அவர்கள் இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க புதிதாக கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்திருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News