செய்திகள்
கருணாநிதி

சைதாப்பேட்டையில் கருணாநிதி வெண்கல சிலையை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

Published On 2019-12-30 07:17 GMT   |   Update On 2019-12-30 07:17 GMT
சைதாப்பேட்டையில் கருணாநிதியின் மார்பளவு வெண்கலசிலை திறப்பு மற்றும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி தொடக்க விழா வருகிற 5-ந்தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை:

தென்சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

கொளத்தூர் தொகுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் கணினி பயிற்சி மையம் தொடங்கி பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

அதேபோல் சைதாப்பேட்டை தொகுதியிலும் தொடங்க திட்டமிட்டு கலைஞர் கணினி கல்வியகம் அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறோம். இந்த அறக்கட்டளை சார்பில் சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்த படித்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.

குறைந்த பட்சம் பிளஸ்-2 படித்த பெண்கள் இந்த பயிற்சியில் சேரலாம். டேலி, எம்.எஸ்.வேர்டு, எக்செல், பவர்பாய்ன்ட், டைப்பிங் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஷிப்டுகள் வகுப்பு நடக்கும்.

பயிற்சிக்கான மாணவிகள் தேர்வு நடந்து வருகிறது. முதற்கட்டமாக 80 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 4 மாதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்ததும் சான்றிதழ் மற்றும் வேலைக்கான ஆணையும் வழங்கப்படும்.

குறைந்த பட்சம் ஆண்டுக்கு 200 பெண்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் கலைஞரின் மார்பளவு வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போல் 5 அடி உயர கிரானைட் தூண் மீது அமைக்கப்பட்டுள்ளது.

வருகிற 5-ந்தேதி தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் சிலையை திறந்து வைத்து, பயிற்சி மையத்தையும் தொடங்கி வைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News