செய்திகள்
நாம் தமிழர் கட்சி

புதுவையில் திட்டமிட்டபடி நாளை பந்த் போராட்டம் - நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

Published On 2019-12-26 08:16 GMT   |   Update On 2019-12-26 08:16 GMT
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் திட்டமிட்டபடி நாளை பந்த் போராட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
புதுச்சேரி:

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், புதுவையில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

புதுவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் 27-ந் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. புதுவையில் ஆளும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி சார்பில் இன்று மாலை தேசியக்கொடி ஏந்தி பேரணி நடக்கிறது. தொடர்ந்து 27-ந் தேதி பந்த் போராட்டத்திற்கும் காங்கிரஸ் கூட்டணி அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் வியாபாரிகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி வியாபாரத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால் பந்த் போராட்டத்தை தள்ளிவைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், பந்த் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில் திட்டமிட்டபடி பந்த் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மொழியை வைத்துத்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. மதத்தை வைத்தோ, ஜாதியை வைத்தோ மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. எனவே மதத்தை வைத்து குடியுரிமை வழங்குவது மனித உரிமைக்கு எதிரானது என்பதால் நாம் தமிழர் கட்சி பொது வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது.

இந்த சட்ட திருத்தத்தை மற்றவர்கள் ஏற்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பதற்காக போராட முன்வரவில்லை. யார் எதிர்த்தாலும், ஆதரித்தாலும் நாம் தமிழர் கட்சி இந்த குடியுரிமை சட்டதிருத்தத்தையும், குடியுரிமை வருகை பதிவேட்டையும் கடுமையாக எதிர்க்கும். இதனை திரும்பப்பெற வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.

இதற்கு வியாபாரிகள், பேருந்து உரிமையாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



நாம் தமிழர் கட்சி அறிவித்த பந்த் போராட்டத்தை ஆதரித்த சமூகநல இயக்கங்கள் தற்போது போராட்டத்தில் பங்கேற்க இயலாது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் வாழ்வுரிமை கட்சி செயலாளர் ஜெகநாதன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், தமிழர்களம் அழகர், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகம் தமிழ்நெஞ்சன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாளை பந்த் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு எங்கள் இயக்கங்கள் சார்பில் ஆதரவு அளித்திருந்தோம்.

போராட்டத்தால் வணிகம் பாதிக்கப்படும் என்பதால் வேறு நாளில் நடத்த வணிகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இதனை கணக்கில் கொண்டு வணிகர்கள், பொதுமக்கள் நலனுக்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News