செய்திகள்
காமராஜர் சிலை

தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை - மாநில தேர்தல் ஆணையம் தகவல்

Published On 2019-12-23 04:46 GMT   |   Update On 2019-12-23 04:46 GMT
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது தலைவர்களின் சிலைகளை மூடத் தேவையில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கோவை:

தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்தது. அதில் ஒன்று வாக்கு சேகரிக்கும் இடத்திலோ, வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களிலோ ஏதாவது தலைவர்கள் சிலைகள் இருந்தால் அதை துணியால் மூடி பொதுமக்கள் பார்க்காதவாறு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த தேர்தல்களின்போது தலைவர்களின் சிலைகளை தேர்தல் அதிகாரிகள் துணியால் மூடி வைத்திருந்தனர்.

ஆனால் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பின்பற்றி வந்த பல நடைமுறைகள் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பின்பற்றப்பட்டாலும் மாநில தேர்தல் ஆணையம் ஒரு விதியை மட்டும் பின்பற்றவில்லை.

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மாதிரி நடத்தை விதி தொகுப்பு புத்தகத்தின் கூடுதல் அறிவுரைகள் பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கான மாதிரி நன்னடத்தை விதி தொகுப்பு என்பது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கான மாதிரி நடத்தை விதி தொகுப்பு என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் காலத்தில் மறைந்த முன்னாள் தேசிய தலைவர்களின் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் உருவ சிலைகளை மறைக்க தேவையில்லை.

ஆனால் உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் காலத்தில் உள்ளாட்சி இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ள சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய குறிப்புகளை நீக்குதல் வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் காலத்தில் உள்ளாட்சி அலுவலகங்கள், உள்ளாட்சி தேர்தல் தொடர்புடைய அலுவலர்களின் அலுவலகங்கள் மற்றும் வளாகப் பகுதிகளில் தேசிய தலைவர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் புகைப்படம் மற்றும் நாள்காட்டிகள் முதலியன காட்சிப்படுத்தக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News