செய்திகள்
தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியில் சாலையில் ஆறுபோல் தண்ணீர் ஓடும் காட்சி

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கனமழை

Published On 2019-12-21 06:53 GMT   |   Update On 2019-12-21 06:53 GMT
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் மானாவாரி பயிர்கள் சேதம் அடைந்தது.
நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்தது. பருவமழை முடிந்த பிறகும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் இன்று காலை வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது.

மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது. இடைவிடாமல் விடிய விடிய மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அதிகபட்சமாக 98 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் கடற்கரை பகுதியில் 69 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தூத்துக்குடியில் கனமழை காரணமாக முத்தம்மாள்புரம், லூர்தம்மாள்புரம், குறிஞ்சிநகர், பூபாலராயர்புரம், சத்யா நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் ஆறு போல தண்ணீர் செல்கிறது. அத்திமரப்பட்டி பகுதியில் ஏராளமான நெற்பயிர்கள், வாழைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

முள்ளக்காடு பகுதியில் உப்பளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. கயத்தாறு பகுதியில் மானாவாரி பயிர்களான உளுந்து, பாசிப்பயறுகள், கடலை வகைகள் சாகுபடி செய்யப்பட்டிருந்த பகுதிகள் மழையினால் சேதம் அடைந்தது. பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதியிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆலந்தலை உடன்குடி பரமன்குறிச்சி, காயல்பட்டணம், ஆறுமுகநேரி, ஆத்தூர் ஆகிய பகுதியில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், ஆத்தூர், ஆலந்தலை, ஆறுமுகநேரி, தளவாய்புரம், பரமன்குறிச்சி, காயாமொழி உடன்குடி ஆகிய பகுதியில் கனமழை பெய்தது.

நெல்லை மாவட்டத்திலும் தாழ்வான பகுதிகளில் உள்ள நெற்பயிர்கள், வாழைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நெல்லை மாநகர பகுதியில் உள்ள அண்ணா நகர், மனக்காவலம் பிள்ளை நகர், மேலகுல வணிகர்புரம் பகுதிகளில் ஏராளமான தண்ணீர் தேங்கியுள்ளது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு மலைப் பகுதியிலும் மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2,441 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,462 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 142.45 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 155.38 அடியாக உள்ளது. இரண்டு அணைகளுமே நிரம்பி முழு கொள்ளளவில் உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,462 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 112.40 அடியாக இருந்தது. மேலும் ஒரு அடி உயர்ந்து இன்று காலை 113.40 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் உச்ச நீர்மட்டம் 118 அடியாகும். இதுவரை இந்த ஆண்டு மணிமுத்தாறு அணை நிரம்பவில்லை. தற்போது மணிமுத்தாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இன்னும் 2 நாட்களில் முழு கொள்ளளவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. நம்பியாறு அணை நீர்மட்டமும் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 21.32 அடியாக உள்ளது. நம்பியாறு அணையின் உச்ச நீர்மட்டம் 22.96 அடியாகும். இந்த அணையும் நாளைக்குள் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொடுமுடியாறு அணை இன்று காலை 43 அடியாக உள்ளது. விரைவில் இந்த அணையும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற அணைகளான கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டது.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ராதாபுரம்-69, நம்பியாறு-62, கொடுமுடியாறு-50, மூலக்கரைப்பட்டி-48, நாங்குநேரி-47, சேர்வலாறு-42, பாபநாசம்-35, கன்னடியன்-33.8, களக்காடு-31.2, மணி முத்தாறு-30.2, அம்பை-28.6, சேரன்மகாதேவி-20.2, பாளை-19.4, ராமநதி-15, நெல்லை-15, செங்கோட்டை-8, குண்டாறு-8, தென்காசி-6.2, கடனாநதி-6, ஆய்க்குடி-4.8, சிவகிரி-3.5, கருப்பாநதி-2.5, அடவிநயினார்-2

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குலசேகரப்பட்டினம்-98, திருச்செந்தூர்-89, காயல்பட்டினம்-69, மணியாச்சி-53, சாத்தான்குளம்-44.6, தூத் துக்குடி-34.5, ஸ்ரீவைகுண்டம்-31, விளாத்தி குளம்-28, ஓட்டப்பிடாரம்-27, வைப்பார்-15, கடம்பூர்-14, கயத்தாறு-14, காடல்குடி-13, கீழஅரசடி-11, வேடநத்தம்-8, எட்டயபுரம்-7, கோவில்பட்டி-5, சூரங்குடி-2.

Tags:    

Similar News