செய்திகள்
மழையில் குடைபிடித்து செல்லும் பெண்கள்

குமரி மாவட்டத்தில் நாள் முழுவதும் இடைவிடாது கொட்டிய சாரல் மழை

Published On 2019-12-21 04:52 GMT   |   Update On 2019-12-21 04:52 GMT
நாகர்கோவிலில் நேற்று காலையில் பெய்யத் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. இடைவிடாது நாள் முழுவதும் கொட்டிய மழையினால் ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

நேற்று காலை முதல் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்யத் தொடங்கியது.

நாகர்கோவிலில் நேற்று காலையில் பெய்யத் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. இடைவிடாது நாள் முழுவதும் கொட்டிய மழையினால் ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி, ஆணைக்கிடங்கு, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், தக்கலை, களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளிலும் நாள் முழுவதும் மழை பெய்தது. இரவு இடி-மின்னலுடன் மழை கொட்டியது. கொட்டாரத்தில் அதிகபட்சமாக 82.4 மி.மீ. மழை பதிவானது.

தொடர் மழையால் கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி கிடந்தது. சுற்றுலா பயணிகள் லாட்ஜுகளிலேயே முடங்கினார்கள். சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் சாமித்தோப்பு, தென்தாமரைகுளம், கொட்டாரம் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தது. மின்தடையும் ஏற்பட்டதால் கிராமங்கள் இருளில் மூழ்கின.

திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.40 அடியாக இருந்தது. அணைக்கு 722 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.30 அடியாக இருந்தது. அணைக்கு 420 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பேச்சிப்பாறை-22.8, பெருஞ்சாணி-31.4, சிற்றாறு-1-18, சிற்றாறு-2-9.2., நாகர்கோவில்-71.2, பூதப்பாண்டி-41.4, சுருளோடு-38.6, கன்னிமார்-45.2, ஆரல்வாய்மொழி-36, பாலமோர்-19.4, மயிலாடி-80.2, கொட்டாரம்-82.4, இரணியல்- 32.4, ஆணைக்கிடங்கு-45.2, குளச்சல்-26.4, குருந்தன்கோடு-52.4, அடையாமடை-21, கோழிப்போர்விளை-45, முள்ளாங்கினாவிளை-13, புத்தன்அணை- 30, திற்பரப்பு-21.


Tags:    

Similar News