செய்திகள்
உடன்குடி பஜார் பகுதியில் மழையில் நனைந்தபடி செல்லும் பள்ளி மாணவர்கள்

நெல்லை மாவட்டத்தில் குளிர்காலம் தொடங்கிய பிறகும் பரவலாக மழை

Published On 2019-12-20 10:29 GMT   |   Update On 2019-12-20 10:29 GMT
நெல்லை-தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்து குளிர்காலம் தொடங்கிய பிறகும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை:

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்து குளிர்காலம் தொடங்கிய பிறகும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக பாபநாசம் மழைப்பகுதியில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. நாங்குநேரி, சேரன்மகாதேவி பகுதிகளில் சாரல்மழை பெய்தது. நெல்லை, பாளை பகுதியில் இன்று காலையிலும் லேசான சாரல்மழை பெய்தது.

தொடர்மழை காரணமாக பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,738 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1,769 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை அணை நீர்மட்டம் 142.55 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 155.41 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 826 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை அணை நீர்மட்டம் 112.40 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளான கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகளும் நிரம்பியுள்ளன. வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது.

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் பருவமழை காலங்களின்போது நன்றாக மழை பெய்து, பெருவாரியான குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அனைத்து பாசன பகுதிகளிலும் விவசாயம் நடந்து வருகிறது. தற்போது பெய்து வரும் சாரல்மழை விவசாய பயிர்களுக்கு மிகவும் நல்லது என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

பாபநாசம்-5, நாங்குநேரி-4, மணிமுத்தாறு -3.8, சேர்வலாறு-3, கடனாநதி-2, கன்னடியான் கால்வாய்-1.8, சேரன்மகாதேவி-1.
Tags:    

Similar News