செய்திகள்
மழை

வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் தஞ்சையில் 43 அடி உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம்

Published On 2019-12-20 10:15 GMT   |   Update On 2019-12-20 10:15 GMT
வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை சராசரியாக 43 அடி வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் பாசன பரப்பு பெரும்பாலும் காவிரி நீரை நம்பியே உள்ளது. சில இடங்களில் பம்பு செட் மோட்டார் மூலமும் பாசனம் நடைபெறுகிறது.

கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது அங்கிருந்து வரும் நீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததையடுத்து காவிரியில் இருந்து 3 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் பெரும்பாலும் கொள்ளிடம் வழியாக கடலுக்கு சென்றது. இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததால் 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.

இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீரை கொண்டு டெல்டா மாவட்டங்களில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 694 ஏரி, குளங்கள் நிரப்பப்பட்டன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சிக்கு சொந்தமான 1,689 குளங்கள் உள்ளன.

இந்த குளங்கள் பெரும்பாலும் வடகிழக்குப் பருவமழை காலக்கட்டத்தில் நிரம்பும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக அனைத்து குளங்களும் நிரம்பி விட்டன. இந்த ஆண்டு குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டன. இதனால் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக கட்டிடங்கள், பொது இடங்களில் மட்டும் நீர் செரிவூட்டல் கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீர் சேகரிக்கப்பட்டு நீர் மட்டங்கள் அளவிடப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் 203 இடங்களில் மழைநீர் செரிவூட்டல் கட்டமைப்பு உள்ளது,

வழக்கமாக நிலத்தடி நீர் மட்டம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் ஓரளவு உயரும். ஆனால் தற்போது டிசம்பர் மாத 2-வது வாரத்திலேயே நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்த மாத இறுதியில் இன்னும் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை சராசரியாக 43 அடி வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தஞ்சை, கும்பகோணம், ஆடுதுறை, பொய்யுண்டார்கோட்டை, பேராவூரணி, சேதுபாவா சத்திரம், பள்ளத்தூர், வல்லம், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, குருங்குளம், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. சில இடங்களில் 100 அடி வரை உயர்ந்துள்ளது.

தற்போது மழைநீர் சேகரிப்பை அனைவரும் உணர தொடங்கி அதனை செயல்படுத்தியும் வருகின்றனர்.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வீடுகள், அலுவலகங்களில் மழைநீர் கட்டமைப்பை காண முடிகிறது. இதன் காரணமாகவும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News