செய்திகள்
கைதான சகுந்தலா

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது

Published On 2019-12-20 02:06 GMT   |   Update On 2019-12-20 02:43 GMT
தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
போத்தனூர் :

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலையில் போன் செய்து, பெண் ஒருவர் பேசினார். அந்த பெண் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கோவைக்கு வரும்போது, மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்த இருப்பதாக மிரட்டல் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அந்த பெண், கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனது வீடுகளில் வெடிகுண்டுகள் அதிகளவில் பதுக்கி வைத்து இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இது தொடர்பாகபோலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கோவையை அடுத்த செட்டிபாளையம் கலைஞர் நகர் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி சகுந்தலா(வயது 47) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து மதுக்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக சகுந்தலா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

சகுந்தலா, தனது சகோதரரிடம் சென்று ரூ.1½ லட்சம் கடன் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். அத்துடன் தனது தம்பி மனைவி பார்வதிக்கு போன் செய்து, சகுந்தலா கடன் கேட்டு சென்றதையும் அவர் வந்து கேட்டால் கொடுக்க வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.

அப்போது பார்வதி வீட்டிற்கு சென்ற சகுந்தலா, கடன் கேட்டு உள்ளார். அப்போது அவரை பார்வதி திட்டி அனுப்பி விட்டார். எனவே அவரை பழிவாங்குவதற்காக சகுந்தலா, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விட்டு சிம்கார்டை கழற்றி வீசி உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News