செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு - மாணவரின் தந்தைக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Published On 2019-12-19 06:15 GMT   |   Update On 2019-12-19 06:15 GMT
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மாணவரின் தந்தைக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
தேனி:

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் முறைகேடாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 மாணவர்கள், அவர்களின் தந்தை 4 பேர், மாணவியின் தாய் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் முன்ஜாமீன் பெற்றார். அவரது தந்தை ரவிக்குமார் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

அவர் நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக தேனி மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் முக்கிய புரோக்கரான ரசீத்துக்கு பண பரிவர்த்தனை செய்ததாக தர்மபுரி புரோக்கர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது உள்ளதாக கூறி தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த மாவட்ட நீதிபதி விஜயா அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் முக்கிய புரோக்கரான ரசீத் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் தவித்து வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனவே அவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News