செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

புதுவை கவர்னர் கிரண்பேடி மீது போலீசில் புகார்

Published On 2019-12-18 09:04 GMT   |   Update On 2019-12-18 09:04 GMT
சர்ச்சைக்குரிய விழாவில் பங்கேற்றதற்கு புதுவை கவர்னர் கிரண்பேடி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி சமீபத்தில் கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வரும் ஸ்ரீராம் வித்யா கேந்திரா பள்ளி விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்றார்.

பள்ளி விழாவில் மாணவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பாபர் மசூதியின் மாதிரி உடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இந்த விழாவில் பங்கேற்ற கவர்னர் கிரண்பேடிக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரிவினையை தூண்டும் நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகமே ஏற்பாடு செய்திருந்தாலும் கவர்னர் கிரண்பேடி கண்டித்து இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதற்காக பிரிவினையை ஊக்குவிக்க கூடாது.

பள்ளி விழாவில் பங்கேற்றதற்கு கவர்னர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என புதுவை மாநில மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கவர்னர் கிரண்பேடி மீது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் புதுவை பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அக்கட்சியின் மாவட்ட தலைவர் பஷீர் அகமது அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகா மாநிலம் கல்லட்கா நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடத்தப்படும் ராம வித்யா கேந்திரா பள்ளியில் கடந்த 15-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு 4 ஆயிரம் மாணவர்கள் மத்தியில் செய்து காட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் புதுவை கவர்னர் கிரண்பேடி, மத்திய மந்திரி சதானந்த கவுடா ஆகியோர் கலந்து கொண்டனர். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

மாணவர்களிடையே மத வெறுப்பை தூண்டி, சட்டம்-ஒழுங்கை கெடுத்து, மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. எனவே, புதுவை கவர்னர் கிரண்பேடி, மத்திய மந்திரி சதானந்த கவுடா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News