செய்திகள்
கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

Published On 2019-12-16 05:00 GMT   |   Update On 2019-12-16 05:00 GMT
பராமரிப்பு பணிக்காக கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது. 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியன்று வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது.

தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதையடுத்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி முதல் 2-வது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது.

இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முதலாவது அணு உலையில் இருந்து 900 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது அணு உலையில் இருந்து 600 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வந்தது. அணு உலைகள் பராமரிப்பு பணிக்காக சில நாட்கள் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி முதல் தொடர்ந்து இயங்கி வந்த 2-வது அணு உலை பராமரிப்பு பணிக்காக நேற்று நிறுத்தப்பட்டது.

இதையடுத்து அந்த அணுஉலையில் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் இரண்டாவது அணுஉலையில் மின்உற்பத்தி நடக்கவில்லை. முதல் அணுஉலையில் மட்டும் 900 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
Tags:    

Similar News