செய்திகள்
பல்லடம் அருகே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

ஒரு ஓட்டின் விலை என்ன? - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு

Published On 2019-12-16 03:16 GMT   |   Update On 2019-12-16 03:16 GMT
‘ஒரு ஓட்டின் விலை பன்றியின் விலையை விட குறைவு’ என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் பல்லடம் அருகே பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தன. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்லடம்:

சமீப காலமாக தமிழகத்தில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கு போக்கு அதிகரித்து உள்ளது. வாக்காளர்கள் பணத்துக்காக தங்கள் வாக்கை விற்பது ஜனநாயக விரோத செயல் என்று தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.

இருப்பினும் ஆங்காங்கே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் போடுவதற்கு டோக்கன், சேலை, வேட்டி வழங்க ஜவுளிக்கடை டோக்கன் என பல்வேறு யுக்திகளை கையாண்டு அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருவது வேதனை அளிக்கிறது. அது மட்டுமின்றி ஓட்டு போடும் வாக்காளர்களில் சிலர் எங்கள் வீட்டில் 3 ஓட்டு, 5 ஓட்டு உள்ளது? எவ்வளவு பணம் தருவீர்கள்? என்று அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் பேரம் பேசும் அவல நிலையும் நிலவுகிறது.

இதன் காரணமாக அரசியலில் நல்லவர்கள் போட்டியிட நினைத்தாலும் பணம் கொடுத்து வாக்கு பெற முடியாதே என்று நினைத்து பின்வாங்குகின்றனர். தேர்தல் கமிஷனும் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந்தேதி, 30-ந்தேதி என இரு கட்டமாக நடைபெறுகிறது.

இதையொட்டி ஊரக பகுதிகளில் பல்வேறு இடங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவிகளை ஊர் மக்கள் ஏலம் விடும் சம்பவங்களும் அதிகரித்து உள்ளன. வசதி படைத்தவர் குறிப்பிட்ட அளவுக்கு பணம் கொடுத்தால் அந்த பதவியை அவருக்கு கொடுக்கலாம் என்ற மனநிலைக்கு இன்றைய மக்கள் தள்ளப்பட்டு இருப்பது வேதனையின் உச்சம்.



இந்தநிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை விமர்சித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘பன்றி விலையை விட, ஓட்டுக்கு விலை குறைவு’ என்றும் தேர்தலில் வாக்குகளை விற்போர் மற்றும் வாங்குவோர் கவனத்திற்கு என்று தலைப்பிட்டு பல்லடம் அருகே பல்வேறு இடங்களில் கரைப்புதூர் மக்கள் மன்றம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

அதில் எருமை மாடு 50 ஆயிரம் ரூபாய், பசு மாடு 40 ஆயிரம் ரூபாய், ஆடு 10 ஆயிரம் ரூபாய், நாய் 25 ஆயிரம் ரூபாய், பன்றி 3 ஆயிரம் ரூபாய். ஆனால், தேர்தலில் மக்களின் விலை 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை உள்ளது. இது பன்றியின் விலையை விடக்குறைவு. சிந்தித்து பணம் பெறாமல், தன்மானத்துடன் வாக்களியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த சுவரொட்டிகள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் கரைப்புதூர் ஊராட்சியில் உள்ள கரைப்புதூர், பாச்சங்காட்டு பாளையம், அருள்புரம் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை பலர் புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப் மற்றும் முகநூலில் பதிவேற்றம் செய்து பலருக்கு அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News