செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

உள்ளாட்சி தேர்தலில் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி 100 சதவீத வெற்றி பெறுவோம்- உதயகுமார் பேட்டி

Published On 2019-12-12 13:50 GMT   |   Update On 2019-12-12 13:50 GMT
உள்ளாட்சி தேர்தலில் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி 100 சதவீத வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை:

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளது. அந்த மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக தமிழகம் உள்ளது. நித்தம் நித்தம் ஏதாவது சாதனையை முதலமைச்சர் செய்து வருகிறார்.

இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே போல் தமிழகத்தின் தனிநபர் வருமானம் தேசிய தனிநபர் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் முன்பு 4.93 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி இன்றைக்கு 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு பின்னர் தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாது கடந்த தி.மு.க. ஆட்சியில் மின் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்று சமீபத்தில் வெளிவந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 ஆண்டுகளில் 930 கோடி ரூபாய் அளவில் தமிழகத்தில் உள்ள 4,865 ஏரி கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்றைக்கு தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அதேபோல் கடந்த ஆண்டு தைத்திருநாளில் அனைத்து இல்லங்களும் மகிழ்ச்சி பெருகும் வண்ணம் பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசை முதல்-அமைச்சர் வழங்கினார்.

தற்போது இந்த தைத்திருநாளில் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசை அறிவித்து அதனை தொடங்கி வைத்துள்ளார். இதற்காக 2363 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்.

இதுபோன்ற சாதனை திட்டங்களை அறிவித்து அதனை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கச் செய்து சாதனை படைத்து வருபவர் நமது முதல்-அமைச்சர். அவருக்கு உறுதுணையாக இருப்பவர் தான் நமக்கு துணை முதல்- அமைச்சர்.

எனவே நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி 100 சதவீத வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News