செய்திகள்
கிரண்பேடி

மத்திய உள்துறை வழிமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்- கிரண்பேடி அறிவுரை

Published On 2019-12-11 16:35 GMT   |   Update On 2019-12-11 16:35 GMT
மத்திய உள்துறை வழிமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாட்ஸ்-அப்பதிவில் கூறியிருப்பதாவது:-

ஊழல் ஒழிப்பு, நிர்வாகத்தில் நிதி விவேகத்தை உறுதிப்படுத்துவது மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து தெளிவான எழுத்து பூர்வ வழிமுறைகள் பெறப்பட்டுள்ளன.

புதுவையில் உள்ள மூத்த பொது அதிகாரிகள் இவற்றை கண்டிப்பாக கடைப்பிடித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டிற்கு ஒத்துழைக்க வேண்டும்.

நிதிக்கட்டுப்பாடு, கொள்முதல், இட மாற்றங்களில் வெளிப்படைத்தன்மை, அரசின் முக்கியமான பதவிகளை அடையாளம் காண்பது, துறைசார் விசாரணைகளை விரைவாக நடத்துவது போன்றவை தற்போது அவசியமானது.

பயனாளிகளுக்கு நேரடியாக நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவது நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்தும். இவற்றை கட்டாயமாக கடைபிடித்தால் நிதி வீணாவது தடுக்கப்படும்.

சமீபத்தில் புதுவை அரசு இலவச அரிசிக்கு பதிலாக நேரடியாக பணத்தை செலுத்தியது பல சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்படுத்தியது.

இதேபோல அனைத்து துறைகளும் வெளிப்படையான, நேரடியான குறைதீர்க்கும் முறைகளை பின்பற்ற வேண்டும். இது பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மத்திய உள்துறை அமைச்சக உத்தரவினை முழுமையாக பின்பற்றி நல்ல நடைமுறைகளை தொடர்வோம், இதுதான் நேர்மையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும்.

புதுவையில் சி.பி.ஐ. கிளை அமைக்கப்பட்டு பணிகளை தொடங்கியுள்ளது. சில முக்கியமான வி‌ஷயங்களையும் விசாரிக்க தொடங்கி உள்ளது. எனவே, மத்திய அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவோம். மத்திய உள்துறை அறிவுறுத்தல் தொடர்பாக அனைத்து செயலர்களுக்கும் தலைமை செயலாளர் அஸ்வினி குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News