செய்திகள்
கொலையுண்ட அப்துல் வாஹித்

திருச்சி அருகே சிறுவன் கொலை- முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் கைது

Published On 2019-12-11 07:46 GMT   |   Update On 2019-12-11 07:46 GMT
திருச்சி அருகே 12 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிமுக கவுன்சிலரின் மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவெறும்பூர்:

திருச்சியை அடுத்த அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் அலியார். இவரது மகன் அப்துல் வாஹித் (வயது 12). 6-ம் வகுப்பு படித்து வந்த இவன் படிப்பு சரியாக வராததால் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தான்.

சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற அப்துல் வாஹித் அதன் பிறகுவீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தான். அரியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அப்துல் வாஹித்தை மர்ம நபர்கள் கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் போட்டு குப்பைகளால் மூடியது தெரிய வந்தது. அவனை கொலை செய்த நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தினர்.

சந்தேகத்தின் பேரில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கயல்விழியின் மகன் இளவரசனை (18) பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் இளவரசன் விடுவிக்கப்பட்ட நிலையில், போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பன்றி வளர்க்கும் பிரச்சனையில் அப்துல் வாஹித் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இளவரசனின் சகோதரரான முத்துக்குமார் (26), தனது நண்பர்கள் லோகேஷ், வீராசாமி, கணேஷ் (17), சரவணன் (19) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இன்று அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்துல் வாஹித் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. படிப்பை பாதியில் விட்ட அப்துல் வாஹித், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கயல் விழியின் மகன் முத்துக்குமாருடன் நெருங்கி பழகி வந்துள்ளான்.

முத்துக்குமார் பன்றிகளை பிடித்து விற்பனை செய்து வந்த நிலையில், அவருக்கு உதவியாக அப்துல்வாஹித் இருந்துள்ளான். இதனிடையே முத்துக்குமாருக்கும், அந்த பகுதியில் பன்றி விற்பனை செய்யும் ஒருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி மோதிக்கொண்ட நிலையில் அப்துல் வாஹித் இருவருக்கும் ஆதரவாக செயல்பட்டுள்ளான். முத்துக்குமார் எடுக்கும் முடிவுகளை அவரது எதிராளிகளிடமும், எதிராளிகள் எடுக்கும் முடிவுகளை முத்துக்குமாரிடமும் தெரிவித்துள்ளான்.

இதையறிந்த முத்துக்குமார், அப்துல் வாஹித் மீது கோபமடைந்ததுடன், சம்பவத்தன்று பன்றி பண்ணைக்கு அழைத்து சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்துல் வாஹித்தை சரமாரி தாக்கியதில் அவன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளான். கொலையை மறைக்க அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். இருப்பினும் போலீசார் விசாரணையில் 5 பேரும் சிக்கிக்கொண்டனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News