செய்திகள்
கோப்பு படம்

விபத்தில் கையை இழந்த பெண்ணுக்கு ரூ.23 லட்சம் இழப்பீடு - மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2019-12-11 05:59 GMT   |   Update On 2019-12-11 05:59 GMT
கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் கையை இழந்த பெண்ணுக்கு ரூ.23 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஜோதி.

கடந்த 2017 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜோதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் ஒடாமா நகரில் உள்ள பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் வேகமாக ஓடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி பலத்த காயம் அடைந்தார்.

அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கையில் ஏற்பட்டிருந்த பலத்த காயங்கள் காரணமாக அவரது இடது கை துண்டிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜோதி தனக்கு ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு சென்னையில் உள்ள மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் மனு அளித்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஜோதி தரப்பில் மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

விபத்து நடந்தபோது ஜோதிக்கு 31 வயது. எனவே அவரது வயது மற்றும் கையை இழந்த அவரது செயல்பாட்டு இயலாமை, மருத்துவ செலவுகள் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு ஜோதிக்கு ரூ.23 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
Tags:    

Similar News