செய்திகள்
கோப்பு படம்

நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் வெங்காயம் பதுக்கலா? போலீசார் அதிரடி சோதனை

Published On 2019-12-10 07:53 GMT   |   Update On 2019-12-10 07:53 GMT
நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் வெங்காயம் பதுக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தினசரி உணவு தேவையில் வெங்காயம் முக்கிய பங்கு வகிப்பதால் போதுமான வெங்காயம் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

தேவைக்கு ஏற்ப வெங்காய உற்பத்தி இல்லாததால் பல்லாரி வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டது. தினமும் ஒரு விலை என்கிற அளவுக்கு வெங்காயத்தின் விலை உள்ளது. விலை அதிகமாக இருப்பதால் பலரும் வெங்காயம் வாங்குவதை குறைத்துக் கொள்ளும் நிலை உள்ளது.

குமரி மாவட்டத்திலும் வெங்காய தட்டுப்பாடு நிலவுகிறது. நாகர்கோவிலில் உள்ள அப்டா மார்க்கெட் மற்றும் வடசேரி சந்தைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து லாரி மூலம் வெங்காயம் மூட்டை, மூட்டையாக கொண்டுவரப்படும்.

நாள் ஒன்றுக்கு 5, 6 லாரிகளில் வெங்காயம் வந்த நிலையில் தற்போது ஒரு லாரியில் வெங்காயம் வருவதே அபூர்வமாகிவிட்டது. இதனால் வெங்காயத்தின் விலையும் உச்சத்தை தொட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்துவந்த வெங்காயத்தின் விலை இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் ரூ.170-க்கு சில்லரை கடைகளில் விற்பனையானது. அதேப்போல சின்ன வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.

வெங்காயத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாலும், தேவை அதிகமாக இருப்பதாலும் வெங்காயத்தை சிலர் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அரசு வெங்காயத்தை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளது.

சில்லரை வியாபாரிகளை பொருத்தவரை 2 டன் வெங்காயம் இருப்பு வைத்துக்கொள்ளலாம். மொத்த வியாபாரிகள் 25 டன் வெங்காயம் இருப்பு வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைவிட அதிக அளவு வெங்காயத்தை இருப்பு வைத்து உள்ளார்களா? என்பதை கண்டறிய உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் வடசேரி கனகமூலம் சந்தையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மொத்த வெங்காய விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளின் கடைகளில் உள்ள வெங்காய மூட்டைகளை கணக்கெடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வெங்காயம் பதுக்கப்பட்டு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால் நாகர்கோவில் மார்க்கெட்டுகளை பொருத்தவரை வெங்காயம் எதுவும் பதுக்கப்படவில்லை. தினசரி தேவைக்குகூட வெங்காயம் வரத்து இல்லாதது தெரிய வந்தது. வெங்காயம் பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெங்காய பதுக்கல் தொடர்பான தகவலை 9487194185 மற்றும் 04652-220457 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News