செய்திகள்
வெங்காய குடோனில் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது எடுத்தபடம்.

வெங்காயம் பதுக்கலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் சோதனை

Published On 2019-12-10 06:58 GMT   |   Update On 2019-12-10 06:58 GMT
கோவை மண்டலத்தில் வெங்காயம் பதுக்கலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கோவை:

தமிழகத்தில் வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு தற்போது மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தநிலையில் குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுதுறை இயக்குனர் பிரதீப் பிலிப் உத்தரவின் பேரில் கோவை சரக துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவை மண்டலத்தில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று அதிரடி சோதனை நடத்தினர்.

கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட், கிணத்துக்கடவு ஆலந்துறை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் உள்ள மொத்த வெங்காய சந்தை மற்றும் குடோன்கள் சில்லரை வியாபாரிகளுக்கு சொந்தமான குடோன்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

இதேபோல நீலகிரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் சோதனை நடத்தினர் .இங்கு வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக வெங்காயம் கொண்டு வரப்படும் சந்தைகள், சில்லரை விற்பனை இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள மொத்த வியாபாரிகள் 50 மெட்ரிக் டன்னும், சில்லரை வியாபாரிகள் 10 மெட்ரிக் டன் அளவுக்கு மட்டுமே வெங்காயத்தை இருப்பு வைக்க வேண்டும். அவ்வாறு இருப்பு வைத்துள்ளனரா? என்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கோவை மண்டலத்தில் வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைக்கவில்லை என்பது தெரிய வந்தது.

அதிக லாபம் ஈட்டும் நோக்கில் யாராவது வெங்காயத்தை பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News