செய்திகள்
டெட் தேர்வு (கோப்புப் படம்)

பி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்

Published On 2019-12-10 06:33 GMT   |   Update On 2019-12-10 06:33 GMT
பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி டெட் எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை:

பலரது பணிச்சுமையை குறைக்க இயந்திரத்தை உருவாக்கினான் பொறியாளன். ஆனால் இயந்திர பயன்பாடு அதிகரித்துவிட்டதால் அந்த பொறியாளனுக்கே இன்று வேலை கிடைப்பது அரிது என்றுதான் சொல்ல வேண்டும். 

உலக அளவில் கல்வித்துறையில் மருத்துவம் மற்றும் பொறியியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பள்ளிப்படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் துறைகளையே தேர்ந்தெடுக்கின்றனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பொறியியல் துறையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பட்டப்படிப்பை முடித்த அனேக பொறியாளர்கள் வேறு துறைகளில் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2015 - 2016ம் ஆண்டுகளில் பி.எட் கல்லூரிகளில்  20 சதவீதம் இடங்கள் பொறியியல் மாணவர்களுக்கு  ஒதுக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் அதிகம் சேராததால் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. பொறியியல் மாணவர்கள் பெரும்பாலானோர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு முயற்சித்து வருகின்றனர். 



இந்நிலையில், பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி டெட் எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

டெட் எனும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் எழுதி 6 முதல் 8 வகுப்புகளுக்கு கணித ஆசிரியராகலாம் என சமநிலை அந்தஸ்து வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பி.இ பட்டப்படிப்புகளில் எந்த பிரிவில் பயின்றிருந்தாலும் இந்த டெட் தேர்வை எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News