செய்திகள்
கொலை செய்யப்பட்ட இந்திரா.

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மனைவியை கொன்றது கூலிப்படை

Published On 2019-12-09 05:56 GMT   |   Update On 2019-12-09 05:56 GMT
விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் மனைவியை கொன்றது கூலிப்படை என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் சுதாகர் நகர் கரிகாலன் தெருவில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 60). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இந்திரா (56), 2-வது மனைவி லீலா. இவர் திருக்கோவிலூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் வேலாயுதம் (23) சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடராஜன் தனது 2-வது மனைவியை பார்ப்பதற்காக திருக்கோவிலூர் சென்றிருந்தார். அப்போது விழுப்புரத்தில் தனியாக இருந்த இந்திராவை மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக கொன்று விட்டு உடலில் தீ வைத்து விட்டு சென்று விட்டனர்.

இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று எரிந்த நிலையில் கிடந்த இந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட இந்திரா அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.

இதன் காரணமாக யாராவது இந்திராவை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த கொலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட இந்திராவிடம் யார்-யார் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார்கள்? என்ற விவரத்தை சேகரித்தனர். அதேபோல் அவரது செல்போன் எண்ணையும் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே இந்திராவின் வீட்டின் பின்புறத்தில் 2 புதிய செருப்புகள் கிடந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் மீண்டும் வரவழைக்கப்பட்டது. செருப்பு கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு அந்த நாய் புதிய பஸ் நிலையம் வரை சென்று அங்கேயே நின்று விட்டது.

இதனால் கொலையாளிகள் வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி மேல்மாடிக்கு சென்று அங்கு இருந்த இந்திராவை அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்திராவை கூலிப் படையை ஏவி கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த கூலிப்படையினர் புதுவையை சேர்ந்தவர்களா? அல்லது விழுப்புரத்தை சேர்ந்தவர்களா? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே இந்திராவின் கணவர் நடராஜன் மற்றும் வியாபாரி உள்பட சிலரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். நடராஜனிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இன்று 2-வது நாளாகவும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்று மாலைக்குள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News