செய்திகள்
பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

புட்லூர் ரெயில் நிலையத்தில் பெண் குழந்தையை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்க முயற்சி

Published On 2019-12-08 14:37 GMT   |   Update On 2019-12-08 14:37 GMT
திருவள்ளூரை அடுத்த புட்லூர் ரெயில் நிலையத்தில் பெண் குழந்தையை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்க முயன்ற பெண்கள் உள்பட 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த புட்லூர் ரெயில் நிலையத்தில் 3 மாத பெண் குழந்தையை ரூ. 7 ஆயிரத்துக்கு ஒரு கும்பல் விற்பதாக குழந்தைகள் பாதுகாப்பு தொலைபேசி எண் ‘181‘-க்கு புகார் வந்தது.

இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைந்து சென்று புட்லூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 இளம்பெண்கள் உள்பட 7 பேர் கும்பல் கையில் 3 மாத பெண் குழந்தையுடன் நின்றனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்குபின் முரணாக பேசினர்.

இதையடுத்து 7 பேரையும் மடக்கி பிடித்து திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். குழந்தை அருகில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட 7 பேரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிகிறது. அதில் இருந்த ஒரு தம்பதி குழந்தை தங்களுடையது என்று கூறினர். ஆனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குழந்தையின் பிறப்பு சான்றிதழை கொடுக்கும்படி கூறி உள்ளனர். கும்பலில் உள்ளவர்கள் ஆந்திரா மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.


மேலும் அவர்கள் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். குழந்தை கடத்தி கொண்டு வரப்பட்டதா? இங்கு எதற்காக வந்தனர்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மையம் சார்பில் போலீசில் புகாரும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News