செய்திகள்
அதிமுக-திமுக

தேர்தல் உறுதி செய்யப்பட்டதால் உள்ளாட்சி தேர்தல் பணியில் அதிமுக-திமுக தீவிரம்

Published On 2019-12-08 10:51 GMT   |   Update On 2019-12-08 10:51 GMT
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதையொட்டி கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்த ஒவ்வொரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க. - தி.மு.க. இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்களை அழைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., பா.ம.க. கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

2-வது நாளாக நேற்றும் கூட்டணி கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள். இதில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மூவேந்தர் முன்னணி கழக இணை பொதுச்செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் நிலவரம் உள்ளிட்டவைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விரிவாக கேட்டறிந்தனர்.

மேலும் சில கூட்டணி கட்சிகளை அழைத்து பேச உள்ளனர். அதன்பிறகு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும்.

தி.மு.க.வை பொறுத்த வரை அந்தந்த மாவட்டச்செயலாளர்கள், ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளனர்.

கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர். இதில் கூட்டணி கட்சியினருக்கும் சில இடங்களை ஒதுக்க வேண்டி உள்ளது.

இதற்காக கூட்டணி கட்சியான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு மாவட்டந்தோறும் சில குறிப்பிட்ட இடங்களை தி.மு.க. ஒதுக்குகிறது.

இதற்காக கூட்டணி கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் தியாகராயநகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சதவீதம் இடங்களை ஒதுக்கலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கிறார்.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை சரியானபடி தேர்ந்தெடுப்பது குறித்தும், அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News