செய்திகள்
கொலை

புதுவையில் இன்று காலை பொதுப்பணித்துறை ஊழியர் வெட்டிக்கொலை

Published On 2019-12-08 10:23 GMT   |   Update On 2019-12-08 10:23 GMT
புதுவையில் இன்று காலை பொதுப்பணித்துறை ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது45). பொதுப்பணித்துறை ஊழியர். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

லோகநாதன் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று பழைய சாராய ஆலை வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு செல்வார்.

அதுபோல் இன்று காலை 6 மணி அளவில் நடை பயிற்சி செல்ல லோகநாதன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். குருசுக்குப்பம் மாதா ஆலயம் அருகில் வந்த போது மூகமுடி அணிந்து இருந்த ஒரு கும்பல் லோகநாதனை வழிமறித்தது.

தன்னை கொல்ல திட்டம்போட்டு கும்பல் வழிமறிப்பதை அறிந்த லோகநாதன் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அலறல் சத்தம் போட்டபடி தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே லோகநாதன் ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்.

அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், சூப்பிரண்டு மாறன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் கொலைக்கு பழிக்குபழியாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தினால் வைத்திக்குப்பம் மற்றும் குருசுக்குப்பத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News